×

மீனத்தில் சனி…! மீளாத் துயரைக் களைவாரா?

நவகிரகங்களில், சூரியனுக்கு அடுத்தபடியாக, அளவற்ற வீரியமும், தேஜஸும் (ஒளி) கொண்டவர், சனி பகவான்!மற்ற கிரகங்களைவிட, குறைந்த வேகத்தில், சூரியனை வலம் வருவதால், “மந்தன்” எனப் பெயர் கொண்டவர்!! தன்னிகரற்ற பலமும், பராக்கிரமும் கொண்ட சனி பகவான், மானிடராகப் பிறந்துள்ள அனைவரின் ஆயுள்காலத்தையும், ஜீவனத்தையும் நிர்ணயிப்பதால், “ஆயுள்காரகர்” எனவும், “ஜீவனகாரகர்” எனவும் ஜோதிடக் கலையால் போற்றப்படுகிறார்.கோள் சாரத்தில், சனி பகவான், மேஷ ராசியைக் கடக்கும்போது, பலம் குறைகிறார். துலாம் ராசியைக் கடக்கும்போது, உச்ச பலத்தை அடைகிறார். மகரம் மற்றும் கும்பம் ஆகிய இரண்டும் அவரது ஆட்சிவீடாகும்!ராசிக்கு, மூன்று மற்றும் ஆறாம் இடங்களில் வரும்போது, நன்மைகளைச் செய்வார். ஜென்ம ராசி, அதற்கு 4, 8, 12ம் இடங்களில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது, சிரமங்கள், சோதனைகள் அதிகமாக இருக்கும் என புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன.

ஜனன கால ஜாதகத்தில், சனி பகவானின் பலம் அல்லது பலகீனம் ஆகியவற்றின் அடிப்படையில்தான், கோள்சாரத்திலும் அவரது சஞ்சார விளைவுகள் அமைவதாக புராதன ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன.பொதுவாக, சனி பகவான், ராசிக்கு 3, 6, 9-ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது, நன்மைகளைச் செய்வார்.மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகளுக்கேற்பவே, சனி பகவானின் விளைவுகளும் அமையும் என பண்டைய பிரசித்திப் ெபற்ற ஜோதிட நூல்கள் கூறுகின்றன. நன்மையானாலும், தீமையானாலும் தவறாது விளைவிப்பதால், சனி பகவானின் சஞ்சார நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை மக்கள் ஆவலுடனும், சற்று கவலையுடனும் கவனிக்கிறார்கள்.சனி பகவானால் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன, நமது புராதன ஜோதிட நூல்களில்!

சனி பகவான், ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிக்கிறார். ஒவ்வொருவரின் ஜனன ராசிக்கும் முந்தைய ராசியில் வரும்போது, ஏழரைச் சனிக் காலம் ஆரம்பமாகின்றது.இந்த ஏழரைச் சனிக்காலம், ஏழரை ஆண்டுகளுக்கு நீடிக்கும். ஏழரைச் சனிக் காலத்தில், ஜென்ம ராசியில் சனி பகவான் வரும்போது, “கண்டகச் சனி” எனக் கூறுவர், பெரியோர். ஜென்ம ராசியில் சனி பகவான் வரும்போது, சிரமங்கள் சற்று கடுமையாகவே இருக்கும். குறிப்பாக, உடல் நலன் பாதிக்கப்படும்.ஏழரைச் சனிக் காலம் முடிவடையும்போது, நன்மை ஒன்றைச் செய்தருள்வதாக கிருஷ்ண பகவானுக்கு, வாக்களித்திருப்பதாக புராதன நூல்களில் சில நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன.ஏழரைச் சனிக் காலத்தில், அதிக சிரமம் ஏற்படாமலிருக்க, புராதன ஜோதிட நூல்களில் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.

சனி பகவானின் சக்தி அளவற்றது. ஏழரைச் சனிக் காலம் வரும்போது, மும்மூர்த்திகளையும்கூட அவர் விட்டுவிடவில்லை இதிகாச – புராண நிகழ்ச்சிகள் கூறுகின்றன!அத்தனை சக்தி கொண்டவர் சனி காசித் திருத்தலத்தில், கங்கைக் கரையில், சிவபெருமானைக் குறித்து, கடும் தவமியற்றி , அதன் பலனாகவே சனி “பகவான்” என்கின்ற அந்தஸ்தைப் பெற்றார்.நன்மையானாலும், தீமையானாலும், எவ்வித பாரபட்சமுமின்றி விளைவிப்பதால்தான், வேறெந்த கிரகத்திற்கும் இல்லா சக்தியும், பெருமையும் சனி பகவானுக்குக் கிட்டியுள்ளது.

மனிதப் பிறவி எடுத்த அனைவருக்கும், சனி பீடிக்கும் காலத்தை “ெஜன்மச் சனி” அல்லது “கண்டச் சனி” (1-ல்) எனவும், “அர்த்தாஷ்டகச் சனி” (ராசிக்கு 4-ம் இடம்) எனவும், “அஷ்டமச் சனி” (8-ம் இடத்தில்) எனவும் 12-ம் இடத்தில், “விரயச் சனி” எனவும் பெரியோர் கூறுகின்றனர்.ஏழரைச் சனிக் காலத்திற்கென்றே, சக்திவாய்ந்த பல பரிகாரங்கள் உள்ளன.மேலும், பல திருத்தலங்களும் பரிகாரத் தலங்களாக விளங்குகின்றன.அளவற்ற சக்திவாய்ந்த சனி பகவானின் சஞ்சார தோஷங்களைப் போக்குவதில், திருநள்ளாறு (சனி பகவானால் பீடிக்கப்பட்ட நளச் (தமயந்தி) சக்கரவர்த்தி, சனி தோஷம் நீங்கப் பெற்ற திருத்தலம், காரைக்கால் அருகிலுள்ளது மற்றும் சென்னைக்கு அருகாமையிலுள்ள பொழிச்சலூரில், அகத்தீஸ்வரர் திருக்கோயிலிலுள்ள புஷ்கரணியில் நீராடி, இறைவனை, மனமுருகித் துதித்தமையால், தோஷம் நீங்கப் பெற்றவராக, வரசித்தி மூர்த்தியாக, கருணாசாகரமாக, ஸேவை சாதிக்கின்றார்,

சனி பகவான்!). குழந்தைவடிவில் அதியற்புதக் காட்சியளித்திடும் திருத்தலமாகவும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்-போன்ற பக்த சீலர்களால் பாடல் பெற்ற திருத்தலமாகவும் விளங்குகிறது, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலுள்ள கதிராமங்கலம் வழியே, திருவிடைமருதூருக்கு அருகே அமைந்துள்ளது, திருக்கோடிக்காவல்!! திருக்கொள்ளிக்காடு மற்றும் குச்சனூர் (தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது), மயிலாடுதுறையில் உள்ள புனுகீசுவரர் கேவிலில், விலையுயர்ந்த செந்நிறத் திருமேனியாக வடிவமைக்கப்பட்டுள்ள சனிபகவான். தெய்வீக இன்னருளைப் பொழிபவராக, தனிச்சந்நிதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். காசி திருத்தலத்தைவிட குந்துமணி அளவு உயர்ந்த வாஞ்சியத் திருத்தலத்தில், புஷ்கரணியாகிய குப்த கங்கை மற்றும் எமதீர்த்தத்தில் நீராடி, திருக்கயிலை எம்பெருமானின் இன்னருளுக்குப் பாத்திரராகிய சனி பகவானை இத்திருத்தலத்தில் தரிசிப்போர்க்கு, அஷ்ட – ஐஸ்வர்யங்களையும் தந்தருகிறார்! இத்தகைய திருத்தலங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, அபார சக்தியடங்கிய யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட, சனி தோஷங்களாகிய ஏழரைச் சனி, ஜென்மச் சனி, அர்த்தாஷ்டகச் சனி, கண்டச் சனி போன்ற துயரங்கள் அ்னைத்தும் கதிரவனைக் கண்ட பனி போலும், தீயினிற் தூசாக்கக் கூடிய திருத்தலங்களாகும்.

இவைகளைப் போல தமிழ்நாட்டில், சனி தோஷப் பரிகாரத் திருத்தலங்கள் பல சிறந்து விளங்குகின்றன. வடக்கே, மகாராஷ்டிர மாநிலத்தில் திகழும் சனி சிங்கனாப்பூர் என்ற சனித் திருத்தலமும் சனிப் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இத்திருத்தலங்களில் சென்று தரிசிக்க உடல் பலமும் – பொருளாதார வசதியும் இல்லாதவர்கள் – முடியாதவர்கள், உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஆலயம் ஒன்றில், சனி பகவானை மனத்தளவில் நினைத்து, வணங்கி, சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வைப்பது, கைமேல் பலனளிக்கும்.இனி, மீன ராசியில், சனி பகவான் சஞ்சரிக்கவிருக்கும் இத்தருணத்தில், நமக்கும், நம் நாட்டிற்கும், நாம் வசிக்கும் உலகிற்கும் என்ன விளைவுகள் நடக்கவுள்ளன என்பதை ஜோதிடக் கலையில் துல்லிய விதிகளின்படி ஆராய்ந்து பார்ப்போம்!!சனி பகவானின் அளவற்ற சக்தி!

நவகிரகங்களில், சனி பகவானுக்கு உள்ள சக்தி, வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது… என்பதைக் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.ஒருசமயம், துவாரகையின் மன்னரான கிருஷ்ணரை, ஏழரைச் சனி பீடிக்க நேர்ந்தது. வேறு வழியில்லை!!துவாரகையில் ஒருநாள்…! திடீரென்று பகவானுக்கு, வனவாசத்தில் இருந்துவந்த பஞ்சபாண்டவர்களின் நினைவு வந்தது!!கொடிய கானகத்தில், அவர்கள் எங்ஙனம் அல்லலுறுகின்றார்களோ? எவ்விதம் இருக்கின்றார்களோ?! என்கிற எண்ணம் அவருடைய மனத்தை வருத்தியது.பகவானுக்கு, எப்போது பார்த்தாலும் பக்தர்களின் மீதுள்ள கவலைதான்!!கொடிய கானகத்தில் என்ன செய்கிறார்களோ…! எவ்விதமெல்லாம் பாடுபடுகின்றார்களோ…? என மனம் துடிதுடித்தது. அவர்களைப் பார்க்க மனம் விழைந்தது.

பக்தர்களை நினைத்தாலே, பகவானுக்கு அனைத்தும் மறந்துவிடும்!!அடுத்த விநாடியே, பஞ்சபாண்டவர்களைப் பார்ப்பதற்கும், ஆறுதல் கூறுவதற்கும் மனம் விழைந்தது. உடனடியாகப் புறப்பட்டுவிட்டார், கால்நடையாகவே, பஞ்ச பாண்டவர்கள் இருந்த கானகத்தை நோக்கி…! அவருக்கிருந்த அவசரத்தில், எவரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை!!துவாரகையிலோ, ஒரே அல்லோகலப்பட்டது நிலைமை! காரணம், கண்ணனைக் காணவில்லை…! எங்கு சென்றிருக்கிறார் என்பதும் தெரியவில்லை!!அதே தருணத்தில், பிரசித்திப் பெற்ற மன்னர் சத்ராஜித்தின் சகோதரரான பிரசேனன் என்பவரும் அடர்ந்த வனப் பகுதியில் ரத்த வெள்ளத்தில் மாண்டுபோயிருந்ததை அவருடன் சென்றிருந்த படை வீரர்கள் கண்டுபிடித்தனர்.

அங்கோ, துவாரகையில் கண்ணனைக் காணவில்லை! இங்கோ கதாயுதத்தில் மாவீரனான, பிரசேனன் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்துள்ளான். ஆயினும், அவன் கழுத்தில் அணிந்திருந்த விலையுயர்ந்ததும், மகத்துவம் வாய்ந்ததுமான ஸ்யமந்தகமணியை (அந்த மணியின் பிரபாவத்தைச் சொல்லி மாளாது! அம்மணி இருக்கும் இடத்தில், அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும். அள்ள – அள்ளக் குறையாத செல்வ வளம் நிறைந்திருக்கும். என்றென்றும் கஜானாப் பெட்டி காலியாகாது! அனைத்து செல்வ வளத்தையும் தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும் வல்லமை பெற்றது, அம்மணி!!) காணவில்லை!வேறென்ன வேண்டும்…?! இரண்டு நிகழ்ச்சிகளையும் இணைத்து விட்டனர், பொதுமக்கள்! கண்ணன்தான், ஸ்மயந்தகமணிக்கு ஆசைப்பட்டு பிரசேனனைக் கொன்றுவிட்டார் என்ற புரளி நாடெங்கும் பரவியது!!பாவம்!! ஏதுமறியாத நிரபராதியான கண்ணனோ, பஞ்சபாண்டவர்களைச் சந்தித்துவிட்டு, துவாரகைக்குத் திரும்பினார்.அரண்மனை வாயிலின் சேவகர்களோ, அவரைப் பார்த்துவிட்டு, முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

அரண்மனையிலோ இவரைப் பார்த்துவிட்டு, தேவி ருக்மணி, முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்!வழக்கமாக, கண்ணன் வெளியில் சென்றுவிட்டு அரண்மனைக்குத் திரும்பும்போது, ருக்மணி மங்கல ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்துவிட்டு, மலர்தூவி, பாதபூஜை செய்வித்துவிட்டு, வணங்கி வரவேற்பது வழக்கம்!!ஒவ்வொரு நிகழ்ச்சியும் வழக்கத்திற்கு மாறாகவே நடப்பதைக் கண்ட கண்ணனுக்கு ஆச்சர்யம்! தயங்கியபடியே, உள்ளே அடியெடுத்துவைத்த கண்ணனுக்கு அடுத்த அடியாகக் காத்திருந்தது!கண்களில் சீற்றம் பொங்க, அண்ணன் பலராமன், கண்ணனை நோக்கி நடந்து வந்தார். “ஸ்மயந்தகமணியைக்கேட்டே பெற்றிருக்கலாமே?! எதற்காகக் கொலை செய்தாய்…?” என்று வெடித்தார்.

நிரபராதியான கண்ணனுக்கோ, ஏதும் புரியவில்லை! “கொலையா? யார் செய்தது…? யாரைச் செய்தனர்?… எதற்காகச் செய்தனர்” என்று கேள்விகளை அடுக்கினார்.பலராமருக்கு சீற்றம் அதிகரித்தது. “கொலையும் செய்துவிட்டு, அதை மறைக்க நாடகமாடுகிறாயா…? சிறு வயதிலிருந்தே, வெண்ணெயைத் திருடிவிட்டு, ஏதும் அறியாதவன்போல் நடித்த அனுபவமா…?!” எனக் கேட்டார்.நிரபராதியான கண்ணனுக்கோ, ஏதும் புரியவில்லை.பின்புதான் புரிந்தது, கண்ணனுக்கு, நிலைமை! “பிரசேனனைக் கொன்று, ஸ்யமந்தகமணியைக் கவர்ந்து சென்றது யார் என்பதைக் கண்டுபிடிக்காமல் துவாரகைக்குத் திரும்பமாட்டேன்…!” என்று சபதம் செய்துவிட்டுச் சென்றார்.வெகு விரைவிலேயே, பிரசேனனின் சடலம் கிடந்த கானகத்திற்குச் சென்று விசாரித்ததில், வேட்டைக்குச் சென்றிருந்த பிரசேனனை சிங்கம் ஒன்று கொன்றுவிட்டதையும்,அதே கானகத்தில், தன் பெண்ணாகிய ஜாம்பவதியுடன் தவத்தில் ஈடுபட்டிருந்த ஜாம்பவான், தற்செயலாக அவ்விடத்திற்கு வந்தபோது, பிரசேனன் வீழ்ந்துகிடந்ததைக் கண்டு, அந்த ஸ்யமந்தகமணியையும் எடுத்துக் கொண்டுபோய் தன் இனிய மகளிடம் கொடுத்ததையும் கண்டறிந்தார்.

முற்பிறவியில் ராமபிரானாக அவதரித்த பகவானே இப்போது கண்ணனாக பிறந்துள்ளதை அறிந்து கொண்டு ஜாம்பவான், தன் மகள் ஜாம்பவதியை கண்ணனுக்கு திருமணம் செய்து கொடுத்து, அன்பளிப்பாக அந்த ஸ்யமந்தகமணியை யும் கொடுத்தார்.இந்த விவரங்களைக் கேட்டறிந்த ருக்மணி, சமாதானமடைந்து, கண்ணனை மங்கல ஆரத்தி எடுத்து, வரவேற்றாள்.கண்ணனை இவ்விதம் பாடாய்ப் படுத்திவைத்து, கொலைப் பழியையும் சுமத்திய ஏழரைச் சனிக் காலம் அன்றோடு நிறைவடைந்தது. விடைபெற வந்த சனி பகவானைக் கண்ட கண்ணனுக்கு, சீற்றம் பொங்கியது.கொலைக் குற்றத்திற்கு ஆளாக்கிய சனி பகவானை சபிக்க முற்பட்டபோது, சனி பகவான் அவரது திருப்பாதங்களைப் பணிந்து, உத்தமியும், பேரழகியுமான ஜாம்பவதியை அவருக்கு அளித்ததை நினைவூட்டி, ஏழரைச் சனிக் காலத்தில், பல இன்னல்களைதத் தந்ததற்கு தன்னை மன்னிக்குமாறு பணிந்தார்.

இனி ஏழரைச் சனிக் காலத்தில், எவரைப் பீடித்தாலும், அதன் முடிவில் மிகப் பெரிய நன்மை ஒன்றையும் செய்வதாக வாக்களித்தார், சனி பகவான்.ஏழரைச் சனிக் காலம் முடிந்ததும், ஆறுதலாக மிகப் பெரிய நன்மையொன்றைச் சனி பகவான் ஒவ்வொருவருக்கும் செய்வதாக ஜோதிட சாஸ்திரமும் கூறியுள்ளது.சிவபெருமானையும் பீடித்த ஏழரைச் சனி!!இத்தகைய சக்தியும், வீரியமும் கொண்டுள்ள சனி பகவான், மும்மூர்த்திகளையும்கூட விட்டதில்லை!ஒருசமயம், திருக்கயிலையில், அன்னை அம்பிகை பார்வதி, சற்று கவலையுடன் இருப்பதைக் கவனித்த பரமேஸ்வரன், “கவலைக்குக் காரணமென்ன…?” எனக் கேட்டார்.”தங்களுக்கு இன்று, ஏழரைச் சனிக் காலம் ஆரம்பமாகிறது! தங்களைப் பீடிப்பதற்கு சனி பகவான், வந்துகொண்டிருக்கிறார்…!” என்று கவலையுடன் பதிலளித்தார், அம்பிகை பராசக்தி.

“என்னையா…? சனியா…? பீடிப்பதா?” எனக்கூறிச் சிரித்தார். “வரட்டும், சனி! நான் இங்கு இருந்தால்தானே என்னை, அவன் பீடிக்க முடியும்?” எனக்கூறி மறைந்துவிட்டார்.சனி பகவானும், அம்பிகையை தரிசித்துவிட்டு, புன்சிரிப்புடன் சென்றுவிட்டார்.அம்பிகைக்கோ, ஆச்சர்யம்! சனி, தன்னை தரிசித்துவிட்டு, அம்மை-அப்பனைப் பற்றி ஏதும் விசாரிக்காமல், சென்றுவிட்டதை நினைத்து வியப்பிலாழ்ந்தார். பரமேஸ்வரன் அங்கு இல்லாததைக் கண்ட சனி பகவான், ஒரு புன்சிரிப்புடன் திரும்பிச் சென்றுவிட்டார். சனி பகவான், ஏமாந்து, திரும்பிவிட்டதாக அம்பிகையும் நினைத்துக் கொண்டுவிட்டார்!அதன் பின்பு ஈசன் எங்கு சென்றுள்ளார் என்பதையறியாமலேயே தவத்தில் ஆழ்ந்தார்.

ஏழரைச் சனிக் காலம் நிறைவடைந்ததும், அவரது தவம் தாமாகவே கலைந்தது. சிவ பெருமானும் காட்சியளித்தார்.நமஸ்கரித்த உமையவள், “ஏழரைச் சனிக் காலத்தில் எங்கு இருந்தீர்கள்…?” எனக் கவலையுடன் விசாரித்தார்.இமயத்தில் உள்ள ஓர் சிறு குகையில், வண்டின் உருவில் மறைந்து, தவத்தில் ஈடுபட்டிருந்ததாக பதிலளித்தார். “எப்படி, ஏழரைச் சனி என்னை ஒன்றுமே செய்ய முடியவில்லை பார்த்தாயா?” என்பதுபோல் பார்த்தார்.அப்போது, அங்கு வந்த சனி பகவான், அம்பிகையையும், ஈஸ்வரனையும் வணங்கி, ஏழரை வருடக் காலம் பரமனை தான் பீடித்ததற்கு தன்னை மன்னிக்கும்படி பிரார்த்தித்தார். ஈரேழு பதினான்கு லோகங்களையும் காத்து ரக்ஷிக்கும் அப்பரம்பொருளை, சனி பகவான், ஈஸ்வரனைப் பீடித்ததின் பலனாகத்தான், பரமேஸ்வரன் அம்பிகையைப் பிரிந்து, இமயத்தின் சிறு குகை ஒன்றில் வண்டு உருவில் ஏழரை வருடக் காலம் மறைந்திருக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டதை அம்பிகையும் உணர்ந்து கொண்டார்.

இதன் மூலம், உலக மக்கள் மட்டுமன்றி, இந்திராதி முப்பத்து முக்கோடி தேவர்களும்கூட, அவரவரது அவதாரக் காலங்களில், தான் பீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்பதை உலகிற்கு உணர்த்தினார், சனி பகவான்!!அவரவரது முற்பிறவிச் செயல்களின் அடிப்படையில் மட்டும்தான், ஏழரைச் சனிக் காலமும் நிர்ணயிக்கப்படுகிறது. இதனை “பூர்வ ஜென்ம நிர்ணய ஸாரம்”, “ஜோதிட ரத்னாகரம்” போன்ற புராதன ஜோதிட நூல்களும் விவரிக்கின்றன.சனி பகவான், கெடுதலை மட்டுமே செய்வார் என்ற கருத்து, முற்றிலும் தவறானது!ஆயுள், ஆரோக்கியம், ஜீவனம் (தொழில், உத்தியோகம்) ஆகியவற்றை நிர்ணயிக்கும் மகத்தான பொறுப்பு, சனி பகவானிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரின் ஜாதகத்திலும், சனி பகவானின் சஞ்சார நிலை, கோள்சார நிலை ஆகியவற்றை முன்கூட்டியே ஜோதிட விதிகளின்படி, அறிந்துகொண்டால், அதற்கேற்றபடி எச்சரிக்கையாக நடந்துகொள்ள உதவும்.இனி, நிகழவிருக்கும், சனிப் பெயர்ச்சி பலன்களை ஜோதிட விதிகளின்படி, துல்லியமாகக் கணித்துக் கூறியுள்ளோம். தினகரன் வாசக அன்பர்கள் படித்து பயன் பெறுவார்களேயானால் அதுவோ யாம்பெறும் சம்மானமாகும்.”சனி” என்றாலே, சிரமங்களை மட்டுமே தருபவர் என்கிற கருத்து, முற்றிலும் தவறானது.சனி பகவான் மட்டுமல்ல! சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களுமே, அவரவரது முற்பிறவிச் செயல்களின் அடிப்படையிலேயேதான் அமைகின்றன.அவற்றை ஒவ்வொருவரின் ஜனன கால ஜாதகத்திலிருந்தும், தசா, புக்திகளின் அடிப்படையிலும் கணித்து அறிந்து கொள்ளலாம்.சதா, சுழன்றுகொண்டேயிருக்கும் நவகிரகங்களின் சக்தி, அளவற்றது.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படும் நன்மைகள் – தீமைகள் அனைத்தும், கிரகங்களின் ஆதிக்கத்தினால் மட்டுமே நிகழ்கின்றன.எந்தெந்த காலகட்டத்தில், அனுகூலமற்ற கிரக தசைகளும், புக்திகளும் நடைபெறுகிறதோ, அவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் கணித முறைகளும், தோஷங்களுக்கு ஏற்ப, செய்யவேண்டிய பரிகார முறைகளும், “பூர்வ ஜென்ம நிர்ணய ஸாரம்”, போன்ற பண்டைய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.இவையனைத்தும் உடனுக்குடன் பலனளிப்பவை. கடைப்பிடிப்பதற்கும் சுலபமானவை.ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிகழும் ஏற்றத் தாழ்வுகள் அனைத்தும், அவரவரது முற்பிறவிச் செயல்களின் அடிப்படையில்தான் அமைகின்றன.அதாவது, இப்பிறவியில் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் இன்ப – துன்பங்கள் அனைத்திற்கும் காரணம், நமது முற்பிறவிச் செயல்களேயாகும்.ஆதலால்தான், மானிட ஜென்மம் பெற்றுள்ள ஒவ்வொருவரும், நல்லவர்களாக வாழ வேண்டும். தம்மால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும். நேர்மையிலிருந்து – தர்ம நெறிகளிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் பிறழக்கூடாது.

அவரவரது சக்திக்கு ஏற்ப, பிறருக்கு உதவ வேண்டும். அன்பே இன்பத்திற்கு வழிவகுக்கும் என்ற உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். சக்திக்கு ஏற்ப பிறருக்கும், பிற உயிர்களுக்கும் உதவ வேண்டும். பாப எண்ணங்களையும், செயல்களையும் அறவே தவிர்க்க வேண்டும். நம் செயல்களின் விளைவுகளே நமக்குத் திரும்பக் கிடைக்கப்பெறுகிறோம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வது அவசியம். எந்தெந்த ராசிகளுக்கு, சனி பகவானின் சஞ்சார நிலை அனுகூலமாக அமையவில்லையோ, அத்தகைய ராசியினர் செய்ய வேண்டிய பரிகாரங்களையும் கூறியிருக்கிறோம். இப்பரிகாரங்கள் அனைத்தும், மகரிஷிகளால் அருளப்பட்ட, சக்திவாய்ந்த பரிகாரங்களாகும். ஆகையால் இவை பலனிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.

Tags : Saturn ,Pisces ,Maalath ,
× RELATED காரிய சித்தியை அருளும் ஆஞ்சநேயர்