×

பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி எதிரொலி: ஜம்மு எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

 

ஜம்மு: ஜம்மு எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. தற்போது எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு வழியாக நேற்று சந்தேகத்துக்கு இடமான சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கண்டறிந்த ராணுவ வீரர்கள், துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் உயிரிழந்தனரா என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

இதுதொடர்பாக ஜம்முவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராணுவ பிரிவான வெள்ளை வீரர்கள் படை ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘உளவு அமைப்புகளின் தகவல்கள் மற்றும் தொடர் கண்காணிப்பின் மூலம் எல்லை கட்டுப்பாடு பகுதியையொட்டிய பிம்பர் காலி பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. விழிப்புணர்வுடன் இருந்த வெள்ளை வீரர்கள் படையால் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் எதிரிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, காடுகளில் யாராவது மறைந்திருக்கிறார்களா என்று ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன்னதாக அல்லது முக்கிய நிகழ்வுகளின்போது ஊடுருவல் முயற்சிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Jammu border ,Jammu ,India ,Rajelari district ,Jammu and Kashmir ,
× RELATED இமாச்சலப் பிரதேசம்: அடல்...