×

கேரளாவில் சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு: முதல்வர் பினராயி விஜயன் உள்பட 14 அமைச்சர்கள் மீண்டும் போட்டி

கேரளாவில் மொத்தம் 140 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, 2 முறை கேரளாவில் ஆட்சியில் இருந்த ஒரே கூட்டணி இடதுசாரி கூட்டணி தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த இருமுறையும் பினராயி விஜயன் தான் முதல்வராக இருந்தார். இம்முறையும் பினராயி விஜயன் தான் முதல்வர் வேட்பாளராக கருதப்படுகிறார்.

இந்நிலையில் நேற்று தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே இடதுசாரி கூட்டணியில் முக்கிய கட்சிகளான  சிபிஎம் மற்றும் சிபிஐ வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. சிபிஎம்மில் 81 வேட்பாளர்களும், சிபிஐயில் 25 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். சிபிஎம்மில் 56 எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். இக்கட்சியில் முதல்வர் பினராயி விஜயன் உள்பட 10 அமைச்சர்களும், சிபிஐயில் 4 அமைச்சர்களும் மீண்டும் தேர்தல் களத்தில் குதிக்கின்றனர்.  பினராயி விஜயன் இம்முறையும் கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் தான் போட்டியிடுகிறார்.

சிபிஎம்மில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களான முகம்மது ரியாஸ், ராஜேஷ், பிந்து, கேளு, ராஜீவ், சஜி செரியான், வீணா ஜார்ஜ், பாலகோபால், சிவன்குட்டி ஆகிய அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர்.சிபிஎம்மில் இன்னும் 5 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. சிபிஐயில் கே.ராஜன், சிஞ்சு ராணி, அனில் மற்றும் பிரசாத் ஆகிய நான்கு அமைச்சர்களும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட உடனேயே இடதுசாரி கூட்டணியில் பெரும்பாலானோர் நேற்று மாலையே பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

Tags : CPM ,CPI ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Left ,
× RELATED யுஏஇயின் புஜைரா முனையத்திலிருந்து...