×

தேர்தல் தேதி அறிவித்தபின் தொகுதி பங்கீடு பேச்சு: நயினார் விரக்தி

திருச்சியில் வரும் 11ம்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்திற்கான இடத்தை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் திருச்சியில் மாநாடு போல நடத்தப்படவுள்ளது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியார் இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தையும் ஆய்வு செய்யப்படும். இதில் ஏதாவது ஒரு இடத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் அதுகுறித்து பேசுவோம். எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். இந்த சந்திப்பு எதற்காக என்பது அவர்கள் இருவருக்கும் தான் தெரியும். தே.ஜ.கூட்டணியில் தவெக இணையுமா இணையாதா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* பாஜ கொடி கட்டிய காரை ஓட்டி நயினாருக்கு டிரைவரான விஜயபாஸ்கர்
பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று திருச்சி வந்தபோது அவருடன் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வந்தார். அவர்கள் பஞ்சப்பூர் இடத்தை ஆய்வு செய்த போது பாஜ கொடி பொருத்திய காரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஓட்டினார். அருகில் நயினார் நாகேந்திரன் அமர்ந்திருந்தார். ஏற்கனவே பாஜ பக்கம் முழுமையாக சாய்ந்துவிட்டது அதிமுக என மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ள நிலையில், தற்போது விஜயபாஸ்கர் பாஜ கொடி பொருத்திய காரை ஓட்டியது பேசும் பொருளாகி உள்ளது.

* திருப்பரங்குன்றத்தில் போட்டியில்லை பின்வாங்கும் பாஜ
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற மாசி மக பவுர்ணமி கிரிவலத்தில் நயினார் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் என்டிஏ மாநாடு நல்ல முறையில் நடந்து முடிந்ததற்காக கிரிவலம் செல்ல வந்தேன். பிரதமர் எந்த ஊருக்கு சென்றாலும் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதனடிப்படையில்தான் திருப்பரங்குன்றம் வந்தார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் எப்போது ஏற்றப்படும் என்ற கேள்விக்கு நான் பதில் கூற முடியாது. திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

ஏற்கனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இங்கு உள்ளார். அதனால் நாங்கள் இங்கு போட்டியிடவில்லை. துணை முதல்வர் பதவி குறித்து தற்போது வரை பாஜ தரப்பில் என்ன நிலை என்பதை ஏற்கனவே தெளிவாக சொல்லிருக்கிறேன். பாஜ சார்பில் நாங்கள் எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் 20 சதவீத பணிகள் முடிந்து என்டிஏ ஆட்சிக்கு வந்ததும் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும். மாநிலங்களவை உறுப்பினர் சீட் குறித்து இதுவரை அதிமுகவிடம் நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவ்வாறு கூறினார்.

* சித்தர்கள் மலையில் அதிமுக எம்எல்ஏ ‘யாகம்’
தென்காசி மாவட்டம், கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற அத்திரிமலை கோரக்கநாதர் கோயில் அமைந்துள்ளது. அடர் வனப்பகுதியில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் சித்தர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 26ம் தேதி இந்தக் கோயில் முன்பு அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா சிறப்பு பூஜைகள் மேற்கொண்டுள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி ஏதும் பெறாமல் கோயில் முன்பு யாகம் வளர்த்து அவர் செய்த ரகசிய பூஜை வெளியே தெரிய வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நெருங்குவதால் மீண்டும் சீட் கிடைக்க வேண்டும். பாஜ, அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில் அம்பை தொகுதி தனது கையை விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக இந்த பூஜை நடத்தினாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags : Nayanar Virakthi ,11th National Democratic Alliance General Meeting ,Trichy ,Narendra Modi ,President of the State of Baja ,Nayinar Nagendran ,former ,Minister of State ,C. Vijayabaskar ,Trichy Punjab ,
× RELATED நாம ஒன்னும் விஐபி கிடையாது; பிரசார...