நெல்லை, மார்ச் 3: நெல்லை அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட முன் விரோதத்தில் டெய்லரின் பைக்கை தீவைத்து எரித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் பூமணி (30). டெய்லரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நெல்லையப்பன் மகன் மகேஷ் (23) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அங்குள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் வைத்து இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் தனது கூட்டாளியான கணேசன் மகன் முத்துமாரி (23) என்பவருடன் பூமணியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது பிரச்னையை தவிர்க்க நினைத்த பூமணியின் மனைவி தனது கணவரை வீட்டுக்குள் வைத்து கதவை பூட்டினார். இதனால் கோபம் அடைந்த அந்த வாலிபர்கள் பூமணியின் குடும்பத்தினரை ஆபாச வார்த்தைகளால் திட்டினர். பின்னர் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பூமணியின் பைக்கிற்கு தீவைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மகேஷ் மற்றும் முத்துமாரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
