×

டெல்லி சுங்கவரி அதிகாரி பேசுவதாக கூறி தனியார் ஊழியரிடம் ரூ.9.10 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அமெரிக்க டாலர் பார்சல் வந்ததாக அழைப்பு வந்ததும்

வேலூர், மார்ச் 18: அமெரிக்க டாலர் பார்சல் வந்ததாக, செல்போன் அழைப்பு வந்த சிறிது நேரத்தில், டெல்லி சுங்கவரி அதிகாரி பேசுவதாக கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.9.10 லட்சம் மோசடி நடந்துள்ளது. வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்தவர் 40 வயது நபர். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது பேஸ்புக் பக்கத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் பாகாயம் நபருக்கு டாலர் மற்றும் தங்கம் அடங்கிய பரிசு அனுப்புவதாக தெரிவித்தார். இந்நிலையில் அந்த நபரின் செல்போனுக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில், யுஎஸ் பார்சல் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், ஜெசிகா என்பவர் தங்களுக்கு பார்சல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த பார்சலை பெறுவதற்கு ரூ.3 லட்சம் பணம் செலுத்த வேண்டும். ஏனெனில் அதில் தங்கம் மற்றும் அமெரிக்க டாலர்கள் உள்ளதாக செல்போனில் பேசிய நபர் தெரிவித்தார். இதற்கிடையில், அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் டெல்லி சுங்க வரித்துறையில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அதில், உங்களது பெயரில் வந்துள்ள பார்சலை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். உங்களை கைது செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு பணம் அனுப்புங்கள் என அதில் பேசிய நபர் தெரிவித்துள்ளார். அதை உண்மை என நம்பிய, தனியார் நிறுவன ஊழியர் ரூ.2 லட்சம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து பல்வேறு நபர்கள் போன் செய்து மிரட்டி கடந்த 16ம் தேதி வரை ரூ.9.10 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் அந்த நபர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Delhi ,Vellore Cyber Crime Police ,Vellore ,Bagayam ,
× RELATED அரசியல் கூட்டங்களை முன்கூட்டியே...