×

தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இணையதளம் வாயிலாக அனைத்து நலத்திட்டங்களுக்கும் எளிமையாக விண்ணப்பிக்கலாம்!

சென்னை: தமிழ்நாடு மீனவர் நல வாரியம் கீழ்கண்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவி திட்டங்களை எளிய அரசு முன்முயற்சியின் மூலம் எளிதாகப் அனுக வழிவகை செய்யப்பட்டுள்ளது.

1. இறப்பு நிவாரணம் (விபத்து மரணம் மற்றும் மீன்பிடிக்கும்போது விபத்தின் காரணம் அல்லாமல் மரணம், இயற்கை மரணம்) மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை
2. விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கான நிவாரணம்
3. மீன்பிடிக்கையில் காணாமல் போன மீனவருக்கான நிவாரணம்
4. உறுப்பினரின் மகன் மற்றும் மகள் கல்வி உதவித் தொகை
5. திருமண உதவித்தொகை
6. மகப்பேறு உதவித்தொகை

தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், பல அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியமின்றி, முழுமையாக இணையதளம் வாயிலாக அனைத்து நலத்திட்டங்களுக்கும் எளிமையாக விண்ணப்பிக்கலாம். ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி மூலம் தனிநபர் அடையாளம் சரிபார்க்கப்பட்டு குறைந்த ஆவணங்களுடன் அனைத்து நலத்திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் அவசியம் இருப்பின் விண்ணப்பதாரர் துணை ஆவணங்கள் சமர்பிக்கலாம். அவை, தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும்.

அனைத்து திட்டங்களின் விண்ணப்ப நிலை இணையதளம் மூலம் கண்காணிக்க இயலும். மேலும், பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு விண்ணப்பத்தின் வெளிப்படைத்தன்மை மேலும் வலுப்படுத்தப்படும். ஒவ்வொரு நலத்திட்ட உதவிகளுக்கும் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தான வழிகாட்டுதல்களுடன் கூடிய விரிவான பயனர் கையேடு இணையதளத்தில் கிடைக்கச் செய்யப்படும்.

கூடுதலாக, இந்த முன் முயற்சியின் கீழ், பின்வரும் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க எளிமைப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1. இறப்பு நிவாரணம் (விபத்து மரணம் மற்றும் மீன்பிடிக்கும்போது விபத்தின் காரணம் அல்லாமல் மரணம், இயற்கை மரணம்) மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை: நிவாரணம் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும், சட்ட சிக்கல்களைக் குறைப்பதற்கும், உறுப்பினர் ஒரு வாரிசுதாரரை முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே நியமிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர் இறப்பு நிவாரணம் பெற வாரிசுதாரரை நியமிக்க முடியும். இறப்புச் சான்று மற்றும் வாரிசுச் சான்று சமர்ப்பித்தல் மட்டுமே போதுமான ஆவணங்கள் ஆகும். தேவைப்பட்டால், ஆவண சரிபார்ப்பு மற்றும் இறப்புக்கான காரணத்தை உறுதிபடுத்துவதற்கு மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அளவில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

துயர காலங்களில் குடும்பங்கள் வெவ்வேறு நடைமுறைகள் மற்றும் காலக்கெடுவுடன் இரண்டு தனித்தனி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியத்தைத் தவிர்ப்பதற்காக, இறப்பு நிவாரணத்துடன் ஈமச்சடங்கு உதவித்தொகை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

2. விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கான நிவாரணம் : இத்திட்டத்தின் கீழ் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவது குறைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர் எளிமையாக விண்ணப்பிக்க இழப்பு சதவீதம் குறிப்பிடப்பட்டுள்ள உடல் உறுப்பு இழப்பிற்கான சான்று மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

3. மீன்பிடிக்கையில் காணாமல் போன மீனவருக்கான நிவாரணம்: இந்த நிவாரணம், முன்னுரிமை அடிப்படையில் வாரிசுதாரர் நியமிக்கப்படுவதை ஏற்றுக்கொள்வதன் மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட ஆவணங்களான காவல்துறை முதல் தகவல் அறிக்கை, குடும்ப உறுப்பினர் சான்று மற்றும் வருவாய் துறையிடமிருந்து அதே காரணத்திற்காக பிற திட்டங்களிலிருந்து எந்த உதவித் தொகையும் பெறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்று மட்டுமே போதுமானதாக இருக்கும். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரால் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உறுதி செய்யப்படும்.

4. உறுப்பினரின் மகன் மற்றும் மகள் கல்வி உதவித் தொகை:
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி: இத்திட்டம் கல்வி மேலாண்மை தகவல் அமைப்புடன் இணைக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கல்வி நிறுவனங்களிலிருந்து பெறப்படும் மதிப்பெண் சான்று சமர்ப்பிக்க வேண்டிய தேவை நீக்கப்படுகிறது. அனைத்து தொடர் பட்டப்படிப்பு, தொழில்கல்வி, பட்டயப்படிப்பு, மற்றும் பல்தொழில்நுட்ப பயிற்சி : இத்திட்டங்கள் பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்புடன் இணைக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய கல்வியாண்டிலிருந்து தானாக நிரப்பப்பட்ட விவரங்களுடன் உள்நுழைவு செய்வதன் மூலம் மறு ஆண்டுக்கு விண்ணப்பம் செய்ய எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

5. திருமண உதவித்தொகை: திருமணப் பதிவுச் சான்று மற்றும் ஆதார் அடையாள சரிபார்ப்பு மட்டுமே போதுமானதாக இருப்பதால், ஆவணத் தேவைகளைக் குறைப்பதன் மூலம் இந்தத்திட்டம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

6. மகப்பேறு உதவித்தொகை: இந்த திட்டம் கர்ப்பம் மற்றும் குழந்தை கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு தரவுகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், மருத்துவரை சந்தித்து சான்று பெற வேண்டிய தேவையை குறைக்கிறது.

இதுதொடர்பாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, மேலும் மேம்படுத்தப்பட்ட இணையதள விண்ணப்பம் உருவாக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.

Tags : Tamil Nadu Fishermen's Welfare Board ,Chennai ,
× RELATED மனைவி சங்கீதா மீதான தவெகவினரின் சமூக...