நாகர்கோவில்: குளங்களில் அனுமதியின்றி தாமரை வளர்த்து பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க நீர் வளத்துறை அதிகாரிகள் காவல்துறையிடம் புகார் அளித்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் 4 ஆயிரம் குளங்கள் இருந்த நிலையில் முறையாக தூர்வாரி சுத்தம் செய்யப்படாத காரணத்தினால் பல குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள், வீடுகள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்களாக மாறியதால் தற்போது சுமார் 2200 குளங்கள் மட்டுமே உள்ளன. இந்த குளங்களிலும் பெரும்பாலான குளங்கள் பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி குளங்களில் தாமரை வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் தாமரை ரவுடி கும்பல்கள் உதவியுடன் பறிக்கப்பட்டு பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. குளங்களில் எந்த வித அனுமதியும் இல்லாமல் தாமரை வளர்ப்பவர்கள் கைபிரிட் தாமரை விதைகளை தூவி வளர்த்து வருவது மட்டுமில்லாமல் குளங்களில் உள்ள இயற்கை தாவரங்களை ஆசிட் போன்ற களை கொல்லிகளை அடித்து அழித்தும் வருவதாக கூறப்படுகிறது. பலமுறை இது தொடர்பான புகார்கள் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டும், தாமரை வளர்ப்பவர்கள் யார் என்பது தெரியாது என கூறி நடவடிக்கை எடுக்காமல் நழுவி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் மீட்டெடுக்கும் போராட்டக்குழுவினர், அதன் தலைவரும், தோவாளை உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான சகாயம் தலைமையில் நீதிமன்ற உத்தரவின் படி குளங்களில் தாமரை வளர்க்க தடை விதிக்க வேண்டும். தாமரை வளர்ப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். காவல்துறை, நீர் வளத்துறை இணைந்து செயல்பட்டால் தான் இதற்கு தீர்வு காண முடியும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக கலெக்டர், எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த பிரச்சினையில், தற்போது நீர் வளத்துறை அதிகாரிகள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளிக்க கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது குளங்களில் அனுமதியின்றி தாமரை வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அந்தந்த காவல் நிலையங்களில் நீர் வளத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புகார் மனுக்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அனுமதியின்றி தாமரை வளர்த்து அதை பறிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்ைக எழுந்துள்ளது. காவல் நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
