×

தச்சநல்லூரில் பள்ளி அருகே அபாய மின்கம்பம் சீரமைப்பு

நெல்லை : நெல்லை தச்சநல்லூரில் பங்களா பள்ளி அருகே அபாய நிலையில் இருந்துவந்த மின்கம்பம் தினகரன் செய்தி எதிரொலியாக தற்போது முற்றிலும் சீரமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை தச்சநல்லூரில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மதுரை சாலையில் பங்களா நடுநிலைப்பள்ளி அருகே பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பமானது காலம் கடந்த நிலையில் அதன்அடிப்பகுதி துருப்பிடித்து ஓட்டை விழுந்த நிலையில் காணப்பட்டது.

மேலும் பலத்த காற்று வீசினால் எந்நேரத்திலும் கீழே விழும் அபாயம் நிலவியது. அத்துடன் இந்த மின் கம்பம் வழியாக உயரழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்படும் நிலையில் அப்பகுதி மக்களும், வாகனஓட்டிகளும் இந்த மின்கம்பத்தை ஒருவித அச்சத்துடன் கடந்து சென்றனர்.

எனவே, மின் கம்பம் சரிந்து விழுந்து மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் ெசலுத்தி துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

மேலும் இதுகுறித்த கோரிக்கை செய்தி தினகரனில் கடந்த பிப்.20ம் தேதி படத்துடன் வெளியானது. இதையடுத்து கள ஆய்வு மேற்கொண்ட தச்சநல்லூர் மின் உதவிப்பொறியாளர் சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்பேரில் துருப்பிடித்து காணப்பட்ட மின்கம்பத்தை ஊழியர்கள் முற்றிலும் சீரமைத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் இதை வரவேற்றுள்ளதோடு இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags : Thachanallur ,Nellai ,Thachanallur, Nellai ,Dinakaran ,Madurai ,Thachanallur, Nellai… ,
× RELATED கோத்தகிரி தேயிலை தோட்டத்தில்...