பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த கவியருவியில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தாலும், நேற்று சுற்றுலா பயணிகள் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டு சென்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவ மழையிலும், அதன்பின் பெய்த வடகிழக்கு பருவ மழையாலும், பல மாதமாக ஆழியார் அருகே உள்ள கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகளவு கொட்டியது.
இதனால், தினமும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அடுத்தடுத்து விடுமுறை நாட்களின்போது, கவியருவிக்கு வந்து சென்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமானது.
கடந்த மாதம் துவக்கம் வரை கவியருவியில் தண்ணீர் வரத்து ஓரளவு இருந்ததுடன், பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்நேரத்தில் கவியருவியில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், சுற்றுலா பயணிகள் பலர், வெகுநேரம் காத்திருந்து ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில், ஆனந்த குளியல் போட்டு சென்றனர். விடுமுறை நாட்களில் சராசரியாக சுமார் 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
ஆனால், கடந்த சில வாரமாக கவியருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது. அதிலும் கடந்த 2 வாரத்துக்கு மேலாக தண்ணீர் வரத்து மிகவும் குறைவானது. இதனால், கவியருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைய துவங்கியது. நேற்று விடுமுறை நாள் என்பதால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து சென்ற நிலை ஏற்பட்டது.
சில பயணிகள் தலையை நனைத்து சென்ற நிலை ஏற்பட்டது. வரும் நாட்களின்போது கவியருவிக்கு தண்ணீர் வரத்து மேலும் குறையும்போது, அந்நேர சூழ்நிலையை பொறுத்து, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
