தர்மபுரி, மார்ச் 2: தர்மபுரி மாவட்டத்தில், இன்று (2ம் தேதி) பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. 84 தேர்வு மையங்களில் மொத்தம் 19,204 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இன்று (2ம் தேதி) தொடங்கி, வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 பேர் எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4,540 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட கலெக்டர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 84 தேர்வு மையங்களில் 175 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 9,359 மாணவர்களும், 9,845 மாணவிகளும் என மொத்தம் 19,204 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் தேர்வுப்பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் வைக்கப்படவுள்ள, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதமேந்திய காவலர்கள் வினாத்தாள் பெறப்பட்ட நாள் முதல் தேர்வுகள் முடியும் வரை பாதுகாப்பு பணிக்கு நியமனம் செய்யப்படவுள்ளனர். மேலும், பொதுத்தேர்வு மைங்களில் உரிய பாதுகாப்பு பணிக்கு காவலர்களும், விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி முடியும் வரை 24 மணி நேரமும் ஆயுதமேந்திய காவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், `தேர்வு ஏற்பாடுகள், கட்டுப்பாடுகள் தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் கொண்டு வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். விடைத்தாள்களில் எவ்வித சிறப்புக் குறியீடு, தேர்வெண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது. மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கூடுதல் நேரம் உட்பட சிறப்பு சலுகைகள் வழங்குதல் சார்ந்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆள் மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும்,’ என்றனர்.
