×

இஸ்ரேல்- ஈரான் போர் எதிரொலி சென்னையில் இருந்து வெளிநாடு செல்லும் பல விமானங்கள் ரத்து

சென்னை: இஸ்ரேல்-ஈரான் போர் எதிரொலியாக, சென்னையில் இருந்து துபாய், தோகா, அபுதாபி, பக்ரைன் உள்பட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லாததால் டெல்லி வழியாக இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல்- ஈரான் நாடுகள் இடையே போர் ஏற்பட்டு, மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து துபாய், தோகா, அபுதாபி, பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள், அதேபோல் அந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தோகாவில் இருந்து சென்னைக்கு வரும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் இருந்து தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவைகளும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை -இஸ்ரேல் இடையே, நேரடி விமான சேவைகள் இல்லை. ஆனால் ஏர் இந்தியா விமான நிறுவனம் சென்னை-டெல்லி -இஸ்ரேல் இடையே இணைப்பு விமானங்களை வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கி வருகிறது. அந்த அந்த விமானங்களிலும் சென்னையில் இருந்து டெல்லி வழியாக இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிகளுக்கு பயண டிக்கெட்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து, நிலைமை சீராகும்போது மீண்டும் சென்னை -டெல்லி- இஸ்ரேல் நாட்டுக்கான இணைப்பு விமானங்களில் டிக்கெட்டுகள் வழங்குவது தொடங்கப்படும் என்றும் ஏர் இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் மஸ்கட் செல்லும் ஓமன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மறு உத்தரவு வரும் வரை ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது விமான சேவைகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. இதையடுத்து சார்ஜாவிலிருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் சார்ஜா செல்லும் ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் துபாயில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து துபாய்க்கும் இயக்கும் அனைத்து விமானங்களும் மறு உத்தரவு வரும் வரையில் ரத்து என்று அறிவித்துள்ளது.

இதுபோல, சென்னையில் இருந்து துருக்கி மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள் செல்லும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். மத்திய கிழக்கு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லக்கூடிய விமான பயணிகள், அமெரிக்க செல்லக்கூடிய விமான பயணிகள், இணைப்பு விமானங்கள் இல்லாமல் அவர்களின் விமான பயணங்களும் ரத்தாகும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் விமான பயணிகள் அனைவரும் தங்களுடைய விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு குறித்து அந்தந்த விமான நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு, தகவல்களைக் கேட்டு அறிந்துகொண்டு அதற்கு தகுந்தார் போல் பயணத் திட்டங்களை வகுக்கும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையே விமானங்கள் வருகை, புறப்பாடு போன்றவைகளை இணையதளங்கள் மூலம் பயணிகள் தெரிந்து கொள்ளும் வசதிகள் ஏற்கனவே இருந்தன. ஆனால், நேற்று பிற்பகல் 3 மணியிலிருந்து விமான வருகை, புறப்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளக்கூடிய இணையதளங்கள் அனைத்தும் செயல்படாமல் முடங்கி விட்டன. எனவே, எந்த தகவல்களையும் விமான பயணிகளும் மற்றும் டிராவல் ஏஜென்ட் நிறுவனங்களும் தெரிந்து கொள்ள முடியாமல் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

* மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் 28 விமானங்கள் நாளை மதியம் வரை ரத்து
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நேற்று திடீரென தாக்குதல்களை நடத்த தொடங்கியதை அடுத்து, ஈரான் பதிலுக்கு அமெரிக்காவின் ஏவுதளங்கள் இருக்கும் பகுதிகளை தாக்குதலை நடத்த தொடங்கியது. இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய வான்வழிப் பகுதிகளை மூடிவிட்டது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் இயக்கப்படும் 16 விமானங்களும், அதேபோல் நாளை அதிகாலையில் இருந்து நாளை மதியம் வரை சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 12 விமானங்களுமாக மொத்தம் 28 விமானங்கள் ரத்து என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் அறிவித்துள்ளனர்.

மேலும் விமானங்கள் ரத்து எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதோடு லண்டன், அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் பல்வேறு விமானங்கள், ஈரான் வான் வழியை கடந்து வரவேண்டிய நிலையில் உள்ளது. ஈரான் வான்வழி மூடப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதைகளில் சுற்றி வருவதால், அந்த விமானங்கள் சென்னைக்கு வந்து விட்டு மீண்டும் புறப்பட்டு செல்வதற்கு பல மணி நேரம் தாமதம் ஆகலாம், அல்லது விமானம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே மற்ற விமானங்களில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளும், அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் வரும் நேரம், மீண்டும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் நேரம் போன்றவைகளை தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்குத் தகுந்தார் போல் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Chennai ,Dubai ,Doha ,Abu Dhabi ,Bahrain ,Israel-Iran war ,Israel ,Air India ,Delhi ,
× RELATED ஈரானின் ஹோர்முஸ் நீரிணையில்...