சிவகங்கை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகள், திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகள், மற்றும் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்ற பன்முகத்தன்மை கொண்ட தொகுதியாக உள்ளது. சிவகங்கை கடந்த 1985ல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை தொகுதி 1952லிருந்து தேர்தலை சந்தித்து வருகிறது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டு சென்னை மாகாணமாக இருந்தபோது 1952ல் நடந்த முதல் தேர்தலில் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்.வி.சுவாமிநாதன் வெற்றி பெற்றார்.
1957ல் நடந்த அடுத்த தேர்தலிலேயே சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட சுப்ரமணியராஜா வெற்றி பெற்றார். 1962ல் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.வி.சுவாமிநாதன் வெற்றிபெற்று சிவகங்கை தொகுதியை மீண்டும் கைப்பற்றினார்.
1967ல் முதன்முறையாக திமுக வென்றதோடு, 1971 தேர்தலிலும் தக்க வைத்துக்கொண்டது. இருமுறையும் திமுகவின் சேதுராமன் வெற்றி பெற்றார். 1977ல் மீண்டும் தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ் 1980, 1984 தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடியது. மூன்று முறையும் காங்கிரசின் உ.சுப்ரமணியன் வெற்றி பெற்றார். 1989ல் மீண்டும் திமுகவை பா.மனோகரன் வெற்றி பெற்றார். 1991ல் தான் முதன் முறையாக அதிமுகவின் கேஆர்.முருகானந்தம் இங்கு வெற்றி பெற்றார்.
1996ல் திமுக தா.கிருஷ்ணன், 2001ல் அதிமுக வி.சந்திரன் வெற்றி பெற்றனர். 2006மற்றும் 2011தேர்தல்களில் இ.கம்யூனிஸ்ட் எஸ்.குணசேகரன் வெற்றி பெற்றார். 2016ல் அதிமுக பாஸ்கரன், 2021ல் அதிமுக செந்தில்நாதன் வெற்றி பெற்றனர். இதுவரை 16 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக காங்கிரஸ் 5 முறை, திமுக 4 முறை, அதிமுக 4 முறை, இந்திய கம்யூனிஸ்ட் 2 முறை, சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். இத்தொகுதியில் வெற்றி பெற்று தா.கிருஷ்ணன் மற்றும் பாஸ்கரன் ஆகிய இருவர் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அல்லது திமுக போட்டியிடவே வாய்ப்புள்ளது. அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ செந்தில்நாதன் தனக்கே சீட் என தேர்தல் வேலை செய்து வருகிறார். ஆனால் கடந்த முறை அமைச்சராக இருந்த போதே சீட் கிடைக்காமல் செய்ததால் இந்த முறை தனக்கு தான் சீட் என முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு தான் இத்தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு எனக்கூறி அக்கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் கிளுவிச்சி கந்தசாமி, முன்னாள் மாவட்டத்தலைவர் மேப்பல் சக்தி ஆகியோர் சீட் கேட்கின்றனர். மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஓரளவு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் அதிமுக போட்டியிடவும், வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளை பாஜ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு வழங்கவுமே அதிக வாய்ப்புள்ளது.
* இறைவன் அனுமதித்தால் பாஜவினர் எம்எல்ஏ ஆவாங்க: திண்டுக்கல் சீனிவாசன் நச்
திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பாஜவில் இருந்து 20 பேர் தமிழக அமைச்சர்களாக ஆவார்கள் என நயினார் நாகேந்திரன் தனது விருப்பத்தை சொல்லி உள்ளார். இறைவன் அனுமதித்தால் எடப்பாடியார் தலைமையில் சட்டசபை உறுப்பினர்களாக ஆவார்கள். இறைவன் அனுமதித்தால் ஒரு சிலர் அமைச்சர்களாக ஆவார்கள் என அவரது விருப்பத்தை தெரிவித்துள்ளார். முறைப்படி அதிமுகவுல பாஜ சேர்ந்து இருக்கிறது.
அதனுடைய தலைமை எடப்பாடியார் என்பதை தெளிவாக சொல்லியுள்ளனர். இதில் எந்த குழப்பமும் இல்லை. துரோகிகள் எல்லாம் விலகி விட்ட பிறகு தெளிந்த நீரோடையாக போராட்டத்திற்கு கிளம்பி விட்டோம். சென்னை சிறைக்கு மாற்றி இருந்தால் அன்றே என்னை கொன்று இருப்பார்கள் என சசிகலா யார் மீது குற்றச்சாட்டு சொல்லி உள்ளாரோ, அவர்களிடம் தான் இந்தக் கேள்வியை கேட்க வேண்டும். தமிழ்நாடு என்றால் நான் தான், நான் இல்லை என்றால் தமிழ்நாடு இல்லை என விஜய் கூறுகிறார். தேர்தலுக்கு பிறகுதான் இதற்கு எல்லாம் விடை தெரியும். தற்போதுதான் ஆரம்பித்துள்ளார். அரசியலில் குழந்தை தவழ்கிறது. வரட்டும் பார்ப்போம். இவ்வாறு தெரிவித்தார்.
* குடும்பமே நடத்த முடியல நாட்டை ஆள போறாராம்.. விஜய் மீது தளவாய் பாய்ச்சல்
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே இரவிபுதூரில், நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது: அதிமுகவை 1972-ல் எம்.ஜி.ஆர். தொடங்கினார். இன்று வரை என்னைப் போன்றவர்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்தோம் என்றால் எம்.ஜி.ஆர் தான் காரணம். ஈகை குணம் படைத்து, எல்லோராலும், எல்லா மதத்தாலும், எல்லா ஜாதியாலும் பாராட்டப்பட்ட பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். அவருக்குப் பின் இந்த கட்சியை வழி நடத்தி, தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஜெயலலிதா, பெண்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இப்போது ஒருவர் புதிதாக வந்திருக்கிறார். முதலில் 4 பேரை கொள்கை தலைவர் என்று சொன்னார்.
இப்போது 5 வதாக எம்.ஜி.ஆர். படத்தை வைத்துக் கொண்டார். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. எல்லோரும் ெஜயலலிதா ஆக முடியாது. அவரது மனைவி விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்திருக்கிறார். அதில், நான் பெயர் சொல்ல விரும்பாத நடிகையுடன் எனது கணவர் விஜய் இருக்கிறார் என கூறி உள்ளார். குடும்பத்தையே சரியாக நடத்த முடியாதவர், நாட்டை ஆள போகிறாரா? அவர் என்ன சொன்னார். திமுகவுக்கும், எங்களுக்கும் தான் போட்டி என்கிறார். களப்பணியே இல்லை. வீட்டில் இருந்து வெளியே வருவதில்லை. பிறகு எப்படி போட்டி வரும். இவ்வாறு அவர் பேசினார்.
