×

67 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது: ரஞ்சி கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது ஜம்மு-காஷ்மீர்!

ஹுப்பள்ளி: இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியில், யாரும் எதிர்பாராத வகையில் ஜம்மு-காஷ்மீர் அணி அபாரமாகச் செயல்பட்டு முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணி முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தியது. முதல் இன்னிங்ஸில் 584 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த அந்த அணி, கர்நாடகத்தை 293 ரன்களுக்குச் சுருட்டியது.

தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் காம்ரான் இக்பால் (160 ரன்கள்) மற்றும் சாஹில் ஆகியோரின் அதிரடி சதங்களால் 630 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. ரஞ்சி டிராபி விதிகளின்படி, இறுதிப்போட்டி ‘டிரா’வில் முடிந்தால், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற அணியே வெற்றியாளராக அறிவிக்கப்படும். இந்த விதியின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் அணி வெற்றியாளராக மகுடம் சூடியது.

இந்தத் தொடர் முழுவதும் வேகப்பந்து வீச்சாளர் அக்கிப் நபி எதிரணிகளை நிலைகுலையச் செய்தார். இந்த சீசனில் மட்டும் மொத்தம் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த வீரராகத் திகழ்ந்த அவர், காலிறுதியில் 12 விக்கெட்டுகளும், அரையிறுதியில் 9 விக்கெட்டுகளும் வீழ்த்தி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். இவரது அபாரமான பந்துவீச்சு அணியின் வரலாற்று வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியைக் கொண்டாட ஹுப்பள்ளி மைதானத்திற்கு நேரில் வந்திருந்த ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, வீரர்களைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பயிற்சி உதவியாளர்களுக்கும் 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசை அறிவித்த அவர், வெற்றி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த வெற்றி வரும் தலைமுறைக்கு ஒரு மிகப்பெரிய தூண்டுகோலாக அமையும் எனத் தெரிவித்த அவர், மாநிலம் முழுவதும் உற்சாகத்தைக் கொண்டு வந்துள்ளார்.

Tags : Jammu and Kashmir ,Hubballi ,
× RELATED 68 ரன் வித்தியாசம் அல்லது சேசிங்கில் 13...