×

முன்கரை அமைத்தல், பாசன மதகுகள் கட்டமைத்தல் உள்பட மதுராந்தகம் ஏரி கொள்ளளவு உயர்த்தும் திட்டம்

மதுராந்தகம், பிப்.27: முன்கரை அமைத்தல், பாசன மதகுகள் கட்டமைத்தல் உள்பட ரூ.120 கோடியில் மதுராந்தகம் ஏரி சீரமைக்கப்பட்டதையடுத்து காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, மதுராந்தகன் உத்தம சோழனால் கி.பி. 10ம் நூற்றாண்டில் சுமார் 4,732 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் 23.4 அடி வரையில் தண்ணீர் சேமிக்க முடியும். இதில், 24.3 அடி தண்ணீர் எட்டியதும் ஏரிநீர் கலங்கள் மதகு வழியாக வெளியேறும் வகையில் கட்டமைத்து ஏரி உருவாக்கப்பட்டது.

நாளடைவில் சேதமடைத்த இந்த ஏரிக்கரையை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட கலெக்டர் லியோனலால் 1799ம் ஆண்டு வலுப்படுத்தினார். அன்றிலிருந்து ஏரி நீரை நம்பி மதுராந்தகம் அருகே உள்ள கடப்பேரி, கத்திரிச்சேரி, வளர்பிறை, முள்ளி, முன்னூத்திக்குப்பம், விளாகம், முருக்கஞ்சேரி, விழுதமங்கலம் உட்பட 36 கிராமங்களில் மொத்தம் 2,853 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற்றது. இந்தநிலையில், இந்த ஏரி தூர்ந்துபோய் உள்ளதாகவும், ஏரியை தூர்வார வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். பல்வேறு போராட்டங்களும் நடத்தினர்.

அதன் பலனாக இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிக்காக தமிழ்நாடு அரசு 2021ம் ஆண்டு ரூ.120 கோடியை ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பணி தொடங்கப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் ஏரியை அளவீடு செய்தல், முன்கரை அமைத்தல், பாசன மதகுகள் கட்டமைத்தல், உபரிநீர் போக்கி கட்டமைத்தல், ஏரிக்கரையை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று பணிகள் தற்போது நிறைவடைந்தது. ஏரியில் கூடுதலாக நீரை சேமிக்கும் வகையிலும், வெள்ளப்பெருக்கின்போது அதிக அளவிலான தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையிலும் 144 மீட்டர் நீளத்துக்கு 12 ஷட்டர் மதகுகள் மற்றும் ஷட்டர்களை திறந்து மூடுவதற்காக நவீன மோட்டார்களும் ரூ.52 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

புனரமைப்புப் பணிகள் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏரி புனரமைத்ததற்கான கல்வெட்டினை நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ஏரி பாசன சங்கத் தலைவர் குமார், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா ஆகியோர் உபரி நீர் போக்கி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் பரத், சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Madhurantakam Lake ,Madhurantakam ,Chief Minister ,M.K. Stalin ,Chengalpattu district ,Madhurantakam Uttama Chola ,
× RELATED காஞ்சி-வந்தவாசி சாலை, செவிலிமேடு...