×

காஞ்சி-வந்தவாசி சாலை, செவிலிமேடு பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.55.38 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி

காஞ்சிபுரம், பிப்.27: காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் செவிலிமேடு பகுதியில் ரூ.55.38 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கு, எழிலரசன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரத்திற்கு வருவதற்கு மிக முக்கிய சாலையாக, காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை இருந்து வருகிறது. குறிப்பாக, இந்த சாலையை பயன்படுத்தி ஆன்மிக சுற்றுலா வருபவர்கள் மற்றும் வேலைக்காக காஞ்சிபுரம் வழியாக பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிக்கு செல்பவர்கள், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருகின்றன. வந்தவாசியில் இருந்து ஒரகடம், படப்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும், மிக முக்கிய பாலமாக செவிலிமேடு பாலம் இருந்து வருகிறது.

குறிப்பாக இச்சாலை வழியாகதான் காஞ்சிபுரத்தில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, மதுரை, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, சேலம், போளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்
கிறது. அதேபோன்று, இந்த பாலத்தில் ஏராளமான கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. வந்தவாசி – காஞ்சிபுரம் சாலையை இணைக்கக்கூடிய முக்கிய பலமாக இருக்கக்கூடிய செவிலிமேடு பாலாறு பாலம், சேதமடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் மறுசீரமைப்பு பணிகள் செய்யப்பட்டாலும், அடுத்த சில நாட்களிலே மீண்டும் பாலம் பழுதடைவதால் வாகனங்கள் வேகமாக அந்த பாலத்தை கடக்க முடியாமல், செவிலிமேடு பாலாறு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இக்கோரிக்கையின்படி, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையால் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் பங்கேற்று, புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர், எம்எல்ஏ எழிலரசன், நிருபர்களிடம் கூறுகையில், இப்பொழுது இருக்கும் பாலாற்று பாலத்தின் அருகே செவிலிமேடு பாலாறு குறுக்கே புஞ்சை அரசன்தாங்கல் பகுதியிலிருந்து செவிலிமேடு வரை, சுமார் 900 மீட்டர் நீளத்திற்கு ரூ.55.38 கோடி மதிப்பீட்டில் செவிலிமேடு, உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது. அகலம் 7.5 மீட்டராக இந்த செவிலிமேடு மேம்பாலம் அமைய உள்ளது என தெரிவித்தார். மேலும், செவிலிமேடு பாலாறு கட்டுவதற்கான டெண்டர் சேலம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரூ.55.38 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்தப் பாலப் பணிகள் 2028 ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மண்டல தலைவர்கள் செவிலிமேடு மோகன், சந்துரு, மாவட்ட பொருளாளர் சன் பிராண்டு ஆறுமுகம், மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பகுதி செயலாளர்கள் வெங்கடேசன், தசரதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Kanchi-Vandavasi Road ,Sevilimedu ,Balat. Kanchipuram ,Eilarasan ,Kanchipuram ,Vandavasi Road ,Kancheepuram ,
× RELATED முன்கரை அமைத்தல், பாசன மதகுகள்...