×

தேர்தல் பணிகள் நேர்மையாக நடைபெறும்: காஞ்சி புதிய கலெக்டர் பேட்டி

காஞ்சிபுரம், பிப்.25: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம், 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி, நேற்று தமிழ்நாட்டில் பணிபுரியும் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்த கலைச்செல்வி மோகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்த தி.சினேகா, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்த புதிய கலெக்டர் சினேகாவிற்கு, சப் கலெக்டர் ஆஷிக் அலி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக அறையில் புதிய கலெக்டர் தி.சினேகா கோப்புகளில் கையெத்திட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் சினேகாவை, அனைத்து துறை அதிகாரிகளும், அலுவலர்களும் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், கலெக்டர் சினேகா, நிருபர்களிடம் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அனைத்து பணிகளும் சிறப்பாக செய்யப்படும். தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறும். மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தையும் தெரிந்துகொண்டு, மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார்.

Tags : Kanchi Collector ,Kanchipuram ,Tamil Nadu Assembly ,Election Commission ,IAS ,Tamil Nadu ,
× RELATED மதுராந்தகம் நகர ஒன்றியத்தில் 240...