×

கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் இடைக்காலத் தடை விதித்து கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு

 

திருவனந்தபுரம்: கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர், மக்களின் உணர்வுகளை சிதைத்து, சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் உள்ளது.

தணிக்கை சான்று வழிமுறைகளை சென்சார் போர்டு புறக்கணித்துள்ளதாகவும் கேரளா ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தணிக்கை வாரியம் மீண்டும் படத்தை மறுஆய்வு செய்ய வேண்டும். சட்டம்- ஒழுங்கு, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பேச்சு, கருத்து சுதந்திரத்தின் வரம்புக்குள் வர முடியாது என கேரளா ஐகோர்ட் கூறியுள்ளது.

மத தீவிரமயமாக்கலை சித்தரிப்பது போன்று வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக ‘தி கேரளா ஸ்டோரி 2’ தயாரிக்கப்பட்டு நாளை வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த படத்தில் கேரளாவை வகுப்பு வாத கண்ணோட்டத்தில் காட்டுவதாகவும், இது சட்டம், ஒழுங்கை பாதிக்ககூடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் நேற்று மூத்த வக்கீல் ஸ்ரீகுமார் ஆஜராகி, படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என்றும், வெளிநாட்டு விநியோக உரிமைகள் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனை கேட்ட நீதிபதி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்பதாகவும், இந்த வாதங்கள் முடியும் வரை வெளியீட்டை ஒத்திவைக்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அப்போது வக்கீல் ஸ்ரீகுமார் 2 நிமிட டீசரை மட்டும் வைத்து நிவாரணங்களை வழங்க முடியாது என்று வாதிட்டார்.

படம் அனைத்து சட்டத் தேவைகளையும் பூர்த்தி செய்து உள்ளது என்றும், மத்திய திரைப்பட வாரியம் அதைச் சான்றளித்தவுடன், ஐகோர்ட்டு அதன் சொந்தக் கருத்தை மாற்ற முடியாது என்றும் அவர் வாதிட்டார். டீசர் வெளியான 16 நாட்களுக்குப் பிறகு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், மனுதாரர்கள் “கேரள மக்களின் கூட்டு கண்ணியத்தை” பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் படத்திற்கு எதிரான நிலுவையில் உள்ள மனுக்கள் இறுதியாக விசாரிக்கப்பட்டு முடிவு செய்யும் வரை படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Tags : Kerala High Court ,Kerala ,
× RELATED விமான டிக்கெட்டுகளை திரும்பப் பெறும்...