பீர்பும்: மேற்குவங்க பீர்பும் மாவட்டத்தில் சைந்தியா ரயில் நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் ஊழியர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தண்டவாளத்தில் சந்தேகத்துக்கு இடமான பொருள் கிடந்ததை பார்த்தனர். உடனே தகவலின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சோதனையில், அந்த பொருள் வெடிகுண்டு என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பாதையில் ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அப்பகுதி முழுவதையும் போலீசார், தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த குண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் ரயில்கள் அனைத்தும் ஒரு வழி பாதையில் மெதுவாக இயக்கப்பட்டன. வெடிகுண்டை வைத்தவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

