×

உல்லாசமாக இருக்க இடைஞ்சல் என கருதி மகளை அடித்துக்கொன்று ஆற்றில் புதைப்பு: 2வது கணவருடன் இளம்பெண் கைது

 

திருமலை: சந்தோஷமாக இருக்க இடையூறாக இருந்த மகளை அடித்துக்கொலை செய்த தாய், தனது 2வது கணவருடன் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் திருப்பதி ஆட்டோ நகரில் உள்ள ரெட்டிகாலனியை சேர்ந்தவர் ஆஷலதா(19). இவருக்கும், ரேணிகுண்டாவை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது மகள் துர்கா (இரண்டரை வயது). குழந்தை பிறந்த சில நாட்களில், ஆஷலதாவுக்கும் ராஜேஷூக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்றரை ஆண்டுக்கு முன் ஆஷலதா, மகள் துர்காவை விட்டுவிட்டு ராஜேஷ் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக வசிக்கிறாராம்.

இதற்கிடையில் இன்ஸ்டாகிராம் மூலம் ஆஷலதாவுக்கு, ஏர்பேடு அடுத்த சென்னம்பள்ளியை சேர்ந்த ரெட்டிகுமாருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பெற்றோர் எதிர்ப்பை மீறி 7 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துள்ளனர். பின்னர் திருப்பதி தெலுங்கு நகர், போஸ்டல் காலனியில், வாடகை வீட்டில் வசித்தனர். சில நாட்களுக்கு பிறகு ரெட்டிகுமார், தனது வீட்டிற்கு ஆஷலதாவை அழைத்துச்சென்றார். ஆனால் அவரது பெற்றோர், ​​ஆஷலதாவையும் அவரது குழந்தையையும் ஏற்க மறுத்தனர். இதனால் ரெட்டிகுமார், ‘குழந்தை துர்கா இல்லாவிட்டால், நம்மை வீட்டில் சேர்த்துக்கொள்வார்கள். நாம் சந்தோஷமாக வாழலாம். எனவே குழந்தையை கொன்றுவிடு’ என அடிக்கடி கூறியுள்ளார்.

அதன்படி ஆஷலதா கடந்த 19ம்தேதி​ துர்காவின் தலையில் கட்டையால் தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சடலத்தை 2வது கணவர் ரெட்டிகுமார், அவரது நண்பர் ராமு உதவியுடன், சொர்ணமுகி ஆற்றில் புதைத்துள்ளனர். இதற்கிடையில் குழந்தை துர்கா குறித்து ஆஷலதாவின் தாய் நாகரத்தினம்மா, மகளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த அவர், போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ஆஷலதா, ரெட்டிகுமார் ஆகியோர் குழந்தை துர்காவை கொன்று புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags : Tirumala ,Ashalatha ,Reddy Colony ,Tirupati Auto Nagar, Andhra Pradesh ,Rajesh ,Renikunda ,
× RELATED விமான டிக்கெட்டுகளை திரும்பப் பெறும்...