திருவாரூர்,பிப்.26: திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணியாற்றிட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை (2026) முன்னிட்டு முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக காவல்துறையோடு இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
எனவே இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணியாற்றிட விருப்பமுள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தின் கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது exweltvr@tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை அளித்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
