×

தேர் மீது கலசம் ஏற்றும் நிகழ்ச்சி வள்ளிமலை முருகன் கோயில் பிரமோற்சவத்தை முன்னிட்டு

பொன்னை, பிப். 26: காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரமோற்சவத்தையோட்டி நாளை முதல் 2ம் தேதிவரை 4 நாட்கள் தேரோட்டம் நடைபெறும். கடந்த 21ம் தேதி மலை உச்சியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அன்று மாலை மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் எழுந்தருளினார். தொடர்ந்து 22ம் தேதி சுப்பிரமணிய சுவாமி சிம்ம வாகனத்திலும் 23ம் தேதி தங்க மயில் வாகனத்திலும் நேற்று முன்தினம் தேதி நாக வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி திருவீதியுலா நடைபெற்றது. நேற்று மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் கடக லக்னத்தில் கலசம் தேரின் மீது ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் இன்று சூர்ண உற்சவம் நடைபெறும்.

இன்று இரவு மூலவர் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனை அடுத்து நாளை முதல் மார்ச் 2ம் தேதி வரை தொடர்ச்சியாக 4 நாட்கள் பிரமோற்சவ தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். 3ம் தேதி வள்ளி முருகன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் பொன்னை இன்ஸ்பெக்டர் கருணா உள்ளிட்ட போலீசார் விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

Tags : Brahmotsavam ,Vallimala ,Murugan Temple ,Ponnai ,Vallimala Subramania Swamy Temple ,Katpadi ,Masi ,
× RELATED பல்வேறு திட்டங்களில் பயன்பெறும்...