×

பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்க அளவீடு விவரங்களை அனுப்ப உத்தரவு வரும் 2026-27ம் கல்வியாண்டில்

வேலூர், பிப்.27: வரும் கல்வியாண்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடைகளுக்கு அளவீடு செய்து விவரங்களை அனுப்ப வேண்டும் என்று தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான விநியோகப் பணிகள் ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது ஆண்டுதோறும் 4 ஜோடி விலையில்லா சீருடைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் மூலம் மாணவர்களின் கல்வித் தொடர்ச்சியை ஊக்குவிக்கவும், ஏழை-எளிய மாணவர்களுக்கு உதவவும், சமூக நலத்துறை மகளிர் தையல் கூட்டுறவு சங்கம் மூலம் தைக்கப்பட்ட உடைகள் பள்ளிகள் மூலமாகவே வழங்கப்படுகின்றன. இதற்கிடையே வரும் கல்வியாண்டு (2026-27) மாணவர்களுக்கான சீருடைகள் வழங்க பள்ளியின் முகவரி, மாணவர்கள் எண்ணிக்கை விவரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய தேவைப்பட்டியலை அனுப்பிவைக்க வேண்டும் என்று தொடக்ககல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2026-2027ம் கல்வியாண்டிற்கு விலையில்லாச் சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு அடுத்த கல்வியாண்டிற்கு வழங்கும் சீருடைத் துணிகள் அளவீடு செய்யபட உள்ளது. இதற்காக தற்போது உள்ள மாணவர்கள் விவரங்கள் மற்றும் விடுபட்ட மாணவ, மாணவிகளின் விவரம் கல்வி மாவட்டம் மற்றும் பள்ளிகள் வாரியாக எமிஸ் லிருந்து பெறப்பட்டது. எனவே 2026-2027 ஆண்டிற்கு விலையில்லாச் சீருடை வழங்க அளவெடுக்கும் பணி மேற்கொள்ள ஏதுவாக, இந்த 2025-2026 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ மாணவிகளின் விவரங்கள் விடுபட்டுள்ளது. விடுபட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளின் விவரங்களை எமிஸ் தளத்தில் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Vellore ,Department of Elementary Education ,Tamil Nadu ,
× RELATED ரயில்ஒன் செயலியில் முன்பதிவில்லா...