டெல்லி: இலவசங்களுக்கு எதிரான வழக்கை உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடை கோரி, மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். பொதுநல மனுக்கள் தேர்தல் காலங்களில் தாக்கல் செய்வது வாடிக்கையாக மாறி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், தற்போது மனுவை ஏற்க முடியாது. தேர்தல் முடிந்தபின் வழக்கை விசாரிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வழக்கறிஞர்கள் ஜெயசுகின், நரேந்தர்குமார் வர்மா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தலுக்கு முன் இலவச திட்டங்களை வாக்குறுதியாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க ஒன்றிய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் முடிந்த பின் இந்த வழக்கை விசாரிக்கலாம். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் இதுப்போன்ற வழக்கை தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க அவசரம் தேவையில்லை என கூறினார்.
