திருவாரூர்,பிப்.25: திருவாரூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குசாவடிகளை எஸ்.பி கருண்கரட் நேற்று நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையயொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தொகுதிகளில் தலா 3 எண்ணிக்கையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கான பயிற்சி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் இருந்து வரும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் என 4 தொகுதிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பதற்றமான வாக்குசாவடிகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாவட்ட எஸ்.பி கருண்கரட் தலைமையில் போலீசார் நேற்று நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம், வண்டாம்பாளை, பூந்தோட்டம், இஞ்சிக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வரும் வாக்குசாவடிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
