×

78வது பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு நேற்று 78வது பிறந்த நாளாகும். இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும், எம்ஜிஆர் சிலைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அதிமுக முன்னணி தலைவர்கள் மாலை அணிவித்தனர். ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மலரையும் எடப்பாடி வெளியிட்டார். கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அதிமுக கொடியை ஏற்றி வைத்து, அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 78 கிலோ எடை கொண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி அனைவருக்கும் வழங்கினார். ஏழைகளுக்கு வேஷ்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சியில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அதேபோன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி, நேற்று தேனியில் உள்ள அவரது வீட்டில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் உடனிருந்தனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

* நிதித்துறை நிபுணர்கள் மூலமாக வரியை உயர்த்துவோம் எடப்பாடி பழனிசாமி 5 நிமிடங்களுக்கு முன்பும்.. பின்பும்…
ஐந்து நிமிடங்களுக்கு முன்பு: திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். ஐந்து நிமிடங்களுக்குப் பின்பு: நாங்கள் வரியை உயர்த்துவோமா என்பது குறித்து இப்போது எப்படிச் சொல்ல முடியும். வரியை உயர்த்துவதற்கு பல்வேறு வழிகளில் நிதிகள் உள்ளது. நிதித்துறை நிபுணர்கள் மூலமாக எந்தெந்த வகையில் வரியை உயர்த்த முடியுமோ அதை உயர்த்தி நாங்கள் அறிவித்த திட்டங்களுக்கு தேவையான நிதியை பெற்றுத் திட்டங்களைச் செயல்படுத்துவோம்.

Tags : Edappadi ,Jayalalithaa ,Chennai ,Chief Minister ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,MGR ,
× RELATED சொல்லிட்டாங்க…