×

கலைஞர் கண்ட அந்த கனவு 2026ல் மு.க.ஸ்டாலின் முயற்சியில் பெரும்பகுதி நிறைவேறி இருக்கிறது: வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் புகழாரம்

சென்னை: ஒன்றுபட்ட திமுகவை உருவாக்க நினைத்த எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞரின் கனவு அன்று தடைபட்டது. கலைஞர் கண்ட கனவு 2026ல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முயற்சியில் பெரும்பகுதி நிறைவேறி இருக்கிறது என்று திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கலைஞர் 2013ல் நடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் நம்மிடமிருந்து ஒதுங்கி இருந்த காங்கிரஸ், எதிரில் இருந்த புதியதமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, ஆகியவற்றிடம் உதவி பெற்று கனிமொழி கருணாநிதியை வெற்றி பெற வைத்தார். நம்மிடம் 23 சட்டமன்ற உறுப்பினர்களும் தேமுதிகவிடம் 29 உறுப்பினர்களும் இருந்த நேரம் 2014ல் நடந்த மேலவை தேர்தலில் கலைஞர் தேமுதிகவிற்கு மேலவை உறுப்பினர் ஒன்றை விட்டு தருவதாக சொல்லி அனுப்பி இருந்தார்.

அவர்களிடம் மறு தகவல் வராமல் காலம் தாழ்த்தியதால் திமுக வேட்பாளராக திருச்சி சிவாவை அறிவித்தார். அறிவிப்புக்கு பின் திருச்சி சிவா கலைஞரை சந்திக்க சென்றார், நானும் உடன் சென்றேன். பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றவுடன் கலைஞர் சொன்னார் “சிவா உன் திறமைக்கு, தியாகத்துக்கு, தகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறாய், ஆனால் தேமுதிக வந்தால் அவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் வரும், நீ விட்டு தர வேண்டும். அது எதிர்கால 2016 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு தோழமையாக அமையும்” என்றார். அதற்கு சிவா அதுக்கு என்ன அண்ணா வந்தால் மகிழும் முதல் ஆள் நான்தான் கண்டிப்பாக வாபஸ் பெறுகிறேன், நீங்கள் சொன்ன பிறகு மறு பேச்சு ஏது” என்று தியாக மனதோடு கூறினார்.

ஏதோ ஒரு சூழல் நெருக்கடி அன்று அந்த உறவு ஏற்படாமல் தடைபட்டது. அன்று தேமுதிக ஏற்று இருந்தால் தொடர்ந்து தேமுதிக ஒவ்வொரு தேர்விலும் ஒரு உறுப்பினர் உருவாகி இருப்பார்கள். அதிமுக என்ற ஒரு கட்சி இன்று இல்லாமல், காணாமல் போயிருக்கும். 2014ல் கலைஞர் கண்ட கனவை, உறவை, அதே எம்.பி. சீட்டை தேமுதிகவிற்கு கொடுத்து 2026 கூட்டணிக்கு அஸ்திவாரம் போட்டு கலைஞரின் கனவை நிறைவேற்றி இருக்கிறார் இன்று தளபதி. அதேபோல் 2008ல் தேசிய அளவில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தோழமை ஓரிடத்தில் நிற்காது என பிரிந்த சூழலில், தலைவர் இரு அமைப்போடும் உறவாட விரும்பினார். காங்கிரஸ் இருந்ததால் கம்யூனிஸ்ட் திமுகவிடம் இருந்து பிரிந்தார்கள். கலைஞர் மனம் வருந்தியது. இரண்டையும் திமுகவின் குடையின் கீழ் கொண்டுவர கலைஞர் கனவு கண்டார்.

அந்த கனவை 2019 தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். 1978 வாக்கில் கலைஞரும், எம்.ஜி.ஆரும், ஒடிசாவிலிருந்த அன்றைய ஒன்றிய அரசின் காபினட் அமைச்சர் பிஜு பட்நாயக் தலைமையில் அதிமுகவையும், திமுகவையும் இணைப்பது என்று முடிவு செய்தனர். கட்சியின் தலைவராக கலைஞரே தொடர்வது என்றும், முதல்வராக எம்.ஜி.ஆரை தொடர்வது என்றும், கட்சி பெயர் திமுக என்று முடிவு செய்ததாக சொல்லப்பட்டு, பிறகு அந்த செயல் தடைபட்டது. எப்படியோ ஒன்றுபட்ட திமுகவை உருவாக்க நினைத்த எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞரின் கனவு அன்று தடைபட்டது. கலைஞர் கண்ட அந்த கனவு 2026ல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முயற்சியில் பெரும்பகுதி நிறைவேறி இருக்கிறது.

ஆட்சியில் மூன்று முறை முதல்வராக இருந்தவர். கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பி.எஸ். முதல் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் திமுகவில் இணைந்து கொண்டே இருக்கின்றனர். அதிமுகவின் அனைவரும் கலைஞர் கண்ட கனவுப்படி திமுகவிலேயே வந்து சேர்ந்து விடுவார்கள். 2036லும் திமுகவே ஒன்றுபட்டு நிற்கும். திமுகவை தவிர வேறு எவர் கைக்கும், கை போகாது. திமுகவை தவிர வேறு எவர் கைக்கும் என காங்கிரசார் கொண்டாடி மகிழ்கின்றனர். ஜெயலலிதாவின் கனவை சிதைத்து, அதிமுகவை, திமுகவுடன் பகுதி பகுதியாக இணைக்க செயல்படுகிறார் பத்து தோல்வி பழனிசாமி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ என புதிய நண்பர்களை சேர்த்து திமுகவை பலமாக்க கலைஞர் கண்ட கனவை தளபதி அமைத்து தருகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : K. ,STALIN ,KASSI MUDUMANICAM ,Chennai ,M. ,G. R. ,Muthuel Karunanidhi Stalin ,Dimuka Business Team ,Kasi Muthu Manikam ,
× RELATED மின் மானியம் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா பாராட்டு