×

தமிழகத்திற்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை ஒன்றிய அரசை கண்டித்து நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்திற்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் என்டிஏ அரசை கண்டித்து நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய பாஜக என்டிஏ அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் இன்று நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டருக்கும், வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டருக்கும் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர். உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சரிவர இயங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சிறு-குறு தொழில்கள் உள்ள அதிக தொழில்வளமிக்க தமிழ்நாடு இந்த கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்பதால் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சரிசெய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருந்தார். ஆனால் தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி நிலைமையை சீராக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை ஒன்றிய என்டிஏ அரசு. நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசவே பிரதமர் மறுத்து வருவது கண்டத்திற்குரியது.

அதோடு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி, நூறு நாள் வேலை திட்ட நிதி, குடிநீர் இணைப்பு நிதி என எந்த நிதியையும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், ஒசூர் விமான நிலையம் என எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் அனுமதி தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவது. மும்மொழி திணிப்பு என்ற பெயரில் தமிழ்மொழியை அழிக்க துடிப்பது, கீழடி அகழ்வாய்வு முடிவுகளை ஏற்க மறுப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

இப்படி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்டிஏ அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து வரும் மார்ச் 15ம் தேதி(நாளை) காலை 10.30 மணியளவில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் – நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரும் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் என்டிஏ அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Union government ,DMK alliance ,Chennai ,DMK alliance parties ,NDA government ,Tamil ,Nadu ,
× RELATED மாம்பழச் சின்னம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் ராமதாஸ் மேல்முறையீடு