×

திருவண்ணாமலையில் 6வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் 167 பேர் கைது

திருவண்ணாமலை, பிப்.8: திருவண்ணாமலையில் தொடர்ந்து 6வது நாளாக அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்துக்கு தீர்வு காண முயற்சிக்கவில்லை. எனவே, அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே தொடர்ந்து 6வது நாளாக நேற்று மறியல் போராட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். அப்போது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்துக்கு ₹50 லட்சம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 115 பெண்கள் உட்பட 167 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.

Tags : servants ,Thiruvannamalai ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து