×

பாமக தலைமை நிர்வாக குழுவுடன் ராமதாஸ் அவசர ஆலோசனை: கூட்டணி குறித்து இன்று முக்கிய முடிவு

திண்டிவனம்: பாமக தலைமை நிர்வாக குழுவுடன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவெடுத்து இன்று மாலை அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதலுக்குபின் அக்கட்சி 2 ஆக பிளவுபட்டுள்ளது. 2026 பொதுத்தேர்தலுக்கு இருவரும் தனித்தனி அணிகளாக போட்டியிட முடிவெடுத்துள்ளனர். தேஜ கூட்டணியில் அன்புமணி இணைந்து விட்ட நிலையில், ராமதாஸ் தரப்பில் இதுவரை கூட்டணி தொடர்பாக அறிவிக்கவில்லை.

இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று அக்கட்சியின் அவசர தலைமை நிர்வாக குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. செயல் தலைவர் காந்தி, கௌரவ தலைவர் ஜிகே மணி, பொருளாளர் சையது மன்சூர்அலி, அருள் எம்எல்ஏ உள்பட 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். பொதுத்தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக நிர்வாக குழுவினரிடம் இறுதிகட்ட கருத்துக்களை ராமதாஸ் கேட்டறிந்து வருகிறார். அதன்பிறகு கூட்டணி தொடர்பாக ராமதாஸ் முக்கிய முடிவை எடுப்பார் என்று தெரிகிறது. இதனால் பாமக ராமதாஸ் அணி யாருடன் கூட்டணி என்பதை இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Tags : Ramadoss ,PMK ,Tindivanam ,Anbumani ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட...