×

மேலூர் தொகுதி எனக்கு தான்: எம்எல்ஏவுடன் மல்லுக்கட்டும் ஜெயலலிதா பாதுகாப்பு அதிகாரியின் அண்ணன்

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் குறிப்பிடத்தக்க தொகுதியாக மேலூர் அமைந்துள்ளது. இந்த தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக அதிமுகவைச் சேர்ந்த பெரியபுள்ளான் (எ) செல்வம் உள்ளார். இந்த தொகுதியில் 2001 முதல் 2016 வரை சாமி எம்எல்ஏவாக இருந்தார். இவருக்கு பின் 2016 முதல் தற்போது வரை பெரியபுள்ளான் தொடர்ந்து இரண்டாம் முறையாக எம்எல்ஏவாக உள்ளார். மூன்றாம் முறையாக சீட் பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கில் ஓடிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரம் அதிமுக சார்பில் எப்படியும் இந்த முறை மேலூரில் சீட் வாங்கி விடவேண்டுமென்பதில் ரொம்பவே கவனமாக காய் நகர்த்தி வருகிறார் தமிழரசன். மேலூர் அருகே பதினெட்டாங்குடி ஊராட்சி மன்ற தலைவரான இவரது சகோதரர் சீமைச்சாமி ஜெயலலிதாவிடம் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். இதை பயன்படுத்தி கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். மேலூரில் அதிமுகவை பொறுத்தவரை ஆர்.சாமி தான் எல்லாம் என்ற அளவுக்கு ஜெயலலிதாவிடம் செல்வாக்கு இருந்தது.

இதனால், சாமியின் வழியில் தமிழரசன் பின்தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் மேலூரில் சாமிக்கும், தமிழரசனுக்கும் ஆகாமல் போக தமிழரசன் தனி டிராக்கில் அரசியல் ஆட்டத்தை துவக்கினார். சாமிக்கு எதிராக காய் நகர்த்தி, எப்படியும் மேலூரில் எம்எல்ஏ ஆகிவிடுவது என்ற லட்சியத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியான தனது தம்பி மூலம் சீட்டை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இவரது முயற்சி வீண் போகாமல் சீட் கிடைத்தது.

ஆனால், மேலூரில் கிடைக்காமல் மதுரை கிழக்கு தொகுதியில் சீட் வழங்கப்பட்டது. கடந்த 2011 தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தமிழரசன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அதேசமயம், உடல் நலம் பாதித்துள்ளதால் தன்னால் தொடர் அரசியலில் இருக்க முடியாது என்று எண்ணிய மேலூர் சாமி, தனக்கு அடுத்தபடியாக இருக்க வேண்டியவர் என பெரியபுள்ளானை அடையாளம் காட்டி, தேர்தலில் நிற்க வைத்து எம்எல்ஏ ஆக்கினார். இதன்பிறகு தொடர்ச்சியாக பெரியபுள்ளான் எம்எல்ஏவாக உள்ளார்.

மேலூர் மீது ஒரு கண் வைத்துள்ள தமிழரசன், கடந்த 4 ஆண்டுகளாக எம்எல்ஏ என்ற முறையில் பெரியபுள்ளான் எங்கு சென்றாலும், அவரது நிழலாக இருப்பார். கட்சி நிகழ்ச்சி மட்டுமின்றி அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட இருவரும் ஒன்றாகவே இருப்பர். இருவரில் யார் தொகுதி எம்எல்ஏ என கேட்கும் அளவிற்கு இருவரின் நடவடிக்கையும் இருக்கும். அந்தளவிற்கு இருவரும் ஒன்றாகவே அரசியல் பயணத்தை தொடர்ந்தனர்.

இந்த தொகுதி கட்சி ரீதியாக ராஜன்செல்லப்பா எம்எல்ஏவின் கட்டுபாட்டிற்குள் இருந்தாலும், இருவரும் தங்களது மாவட்ட எல்லையை தாண்டி மாஜி அமைச்சர் உதயகுமாரை பின்தொடர்ந்து வந்தனர். தற்போது யாருக்கு மேலூர் சீட் என்ற ரீதியில் இருவருக்கும் இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழரசனுக்கு இந்த முறை மேலூரில் எப்படியாவது சீட் வாங்கித் தருகிறேன் என உதயகுமார் உத்தரவாதம் கொடுத்துள்ளாராம்.

இந்த தகவல் பெரியபுள்ளான் காதுக்கு வர, நான் சிட்டிங் எம்எல்ஏவாக இரண்டாம் முறையாக இருக்கிறேன். மூன்றாம் முறையாகவும் எனக்கு தான். எப்படி அவருக்கு தருவார் என்பதை பார்ப்போம் எனக் கூறி மாவட்டச் செயலாளரான ராஜன்செல்லப்பாவிடம் சென்றுள்ளார் பெரியபுள்ளான். இந்த விவகாரம் தற்போது எடப்பாடியின் கவனத்திற்கு போயுள்ளது. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் போது தான் யார் வேட்பாளர் என்பது வெளிச்சத்திற்கு வரும் என்ற நிலையில், இருவரின் அன்றாட சந்திப்பிற்கான இடமாக இருந்த மேலூர் செக்கடி லாரி ஆபீசிற்கு இருவருமே தற்போது வருவதில்லையாம்.

தமிழரசன் தனது தொழில் நிறுவனங்கள், உதயகுமாரின் அன்றாட பணியிடங்கள் என கிளம்பி செல்ல, பெரியபுள்ளானோ மேலூர் தொகுதிக்குட்பட்ட அழகர்கோவில் பகுதியிலுள்ள நண்பரின் கடையில் அதிக நேரம் செலவிடுகிறாராம். இத்தனை ஆண்டுகளாக நிழல் போல பிரியாமல் சுற்றி வந்தவர்களிடையே சீட்டை கைப்பற்ற நடக்கும் இந்த நேரடி மோதல், மதுரை அதிமுக வட்டாரத்தில் இப்போது ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.

Tags : Malur ,Malluktu ,MLA ,Jayalalitha ,Madurai District ,Peryapothaan (A) Richam ,Atamugawa ,Sami ,
× RELATED சொல்லிட்டாங்க…