×

இதுதான் என்டிஏ கூட்டணியின் ராஜ்யசபா சீட் கணக்கு; வாசனுக்கு -1 டிடிவிக்கு -1 அதிமுகவுக்கு -0: மிரட்டும் டெல்லி: உருட்டும் எடப்பாடி

மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் 6 எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் முடிகிறது. இதில் திமுக சார்பில் 4 உறுப்பினர்களையும், அதிமுக சார்பில் 2 உறுப்பினர்களையும் தேர்வு செய்யலாம். ஒருவரை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்களின் ஓட்டுக்கள் தேவை. ஆனால் அதிமுகவின் 66 எம்எல்ஏக்களில் 3 பேர் ராஜினாமா செய்து விட்டனர். ஒரு எம்எல்ஏ காலமாகி விட்டார். ஓ.பி.எஸ், ஐயப்பன் ஆகியோர் தனியாக இருப்பதால் அவர்களின் வாக்கு அதிமுகவிற்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

தற்போது அதிமுகவில் 60 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களுடன், பாஜ 4, அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் 3 ஆகியோரை சேர்த்தாலும் 67 எம்எல்ஏக்கள் தான் வருகிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரையில் 4 பேர் தேர்வு உறுதியாகும். அதேநேரத்தில் அதிமுக தரப்பில் 2 பேர் தேர்வு செய்யப்படுவது உறுதி என்றாலும் போட்டி என்று வந்து விட்டால் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், ஒருவர் போட்டியிடுவதாக மனுதாக்கல் செய்தால் தேர்தல் வரும். அப்படியே ஒருவர் மனுதாக்கல் செய்யும்போது, 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும்.

அவ்வாறு மனுதாக்கல் செய்யவில்லை என்றால் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்நிலையில் பாஜவின் 4 எம்எல்ஏக்கள் இருப்பதால் ஒரு எம்பி பதவியை தங்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிபந்தனையை பாஜ தரப்பில் வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்துவரும் தகவல் கசிந்துள்ளது.

இதன்காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். குறிப்பாக நாங்கள் யாரை கைகாட்டுகிறோமோ அவருக்கு தான் சீட் கொடுக்க வேண்டும் என்ற கடும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமியை உதறி தள்ளிவிட்டு, பாஜ பக்கம் சாய்ந்துவிட்டார். அவர் அதிமுக சார்பில் தான் எம்.பி.யாக இருந்தார்.

அந்த நன்றி உணர்வு கூட அவருக்கு இல்லாமல்போய் விட்டதாக அதிமுகவினர் குமுறுகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் நெஞ்சில் அந்த துரோகம் நெருப்பாக எரிகிறது. இதற்கிடையில் ஜி.கே.வாசனின் பதவிக்காலம் முடிவடைவதால் மீண்டும் எம்பியாக வேண்டும் என்ற ஆசை அவரது நெஞ்சில் கொழுந்துவிட்டு எரிகிறது. இதனால் அவர் பாஜ மூலம் மீண்டும் எம்.பியாகி விடலாம் என காய்நகர்த்தி வருகிறார்.

அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பதாக இருந்தால் தூக்கில் தொங்கி உயிரை விட்டு விடலாம் என்று கூறிய டிடிவி தினரகன், மீண்டும் பாஜ கூட்டணியில் இணைந்ததுடன், எடப்பாடி பழனிசாமி, எனது மூத்த சகோதரன் என கூறியிருக்கிறார். இவருக்கு எம்.பி.சீட் வழங்கி, ஒன்றிய அமைச்சராக்க பாஜ வாக்குறுதி கொடுத்து தான் கூட்டணிக்கு வரவழைத்துள்ளது. எனவே, அதிமுகவில் இருக்கும் ஒரு சீட்டை பெற்று தினகரனுக்கு கொடுக்கலாம் என்ற திட்டத்தை பாஜவினர் வைத்துள்ளனர்.

ஆனால் தினகரனுக்கு எம்.பி. பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி சம்மதிக்க மறுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. பாஜவின் கடும் நெருக்கடி காரணமாக எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை எப்போதும் நம்பவே முடியாது என கருதி செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தேவர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு எம்.பி. பதவி கொடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் பாஜவின் நெருக்கடி காரணமாக யாருக்கு சீட் கொடுப்பது என தெரியாமல் கடும் திணறலுக்கு ஆளாகியுள்ளார்.

Tags : Rajya Sabha Seat ,NDA Alliance ,Vasan ,DTV ,Tamil Nadu ,States ,Dima ,Dhimuka ,
× RELATED மதுரையில் இன்று நடக்கும்...