சென்னை: அதிமுகவில் மூத்த நிர்வாகிகள், உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை என அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் சபாநாயகரின் மகன் குற்றச்சாட்டினார். இது, எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் சபாநாயகரும் அவினாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை நேற்று இணைத்துக்கொண்டார்.
கடந்த 2016ம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சியின் போது சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் தனபால். இவரது மகன் லோகேஷ். இவரும் அதிமுகவில் இருந்து வந்தார். லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிமுக ஐடி பிரிவு அவினாசி தொகுதி பொறுப்பாளராகவும் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிடம் தோல்வி அடைந்தார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10.13 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில், 2.20 லட்சம் ஓட்டுகள் மட்டுமே பெற்று 3வது இடைத்தையே பிடித்தார். 2.32 லட்சம் வாக்குகள் பெற்ற பாஜ வேட்பாளார் எல்.முருகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் சட்டசபை தேர்தலில், தனது தந்தை எம்எல்ஏவாக இருந்து வரும் அவினாசி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்துள்ளார்.
அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்தவரை செங்கோட்டையன் சமாதானம் பேசி தவெகவில் இணைத்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும். காரணம், சட்டமன்ற உறுப்பினர் தனபால், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் எம்எல்ஏ மனோகரன், வி.எஸ்.பாபு, கு.ப.கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் வரிசையில் தற்போது தவெகவில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் இணைந்துள்ளார். மேலும், தலித் எழில்மலையின் மகள் கேத்ரின் எழில்மலை, இமானுவேல் சேகரனின் பேரன் சக்கரவர்த்தி, ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த அசோக், அதிமுகவைச் சேர்ந்த பாபுஜி கவுதம் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளனர்.
தவெகவில் இணைந்த பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: அதிமுகவில் எனது தந்தையோ, மூத்த நிர்வாகிகளோ, உழைத்தவர்களுக்கோ மரியாதை குறைவாகவே தலைமையால் நடத்தப்படுகின்றனர். எனது தந்தை பொறுமையாக இருந்ததால் நாட்களை கடத்திவிட்டார். கடந்த 2024 தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி என் முதுகில் குத்தி விட்டனர்.
அதிமுக பாஜவுடன் கூட்டணி வைத்ததால் மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். ஜெயலலிதாவோ, எம்.ஜி.ஆரோ இந்த மாதிரி கட்சியை நடத்தவில்லை. குறிப்பிட்ட மக்களுக்கான அரசியலாக அதிமுகவின் அரசியல் நடக்கிறது. அதனால் அதிமுகவின் தொண்டர்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
