மதுரை: எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக. அதனால், உங்களின் இந்த சிபிஐ, ஈடி, ஐடி என எந்த சித்து விளையாட்டிற்கு நாங்கள் அஞ்சமாட்டோம். என்ன ஆனாலும் சரி, நாங்கள் எழுந்து நிற்போம், ஒரு கை பார்ப்போம் என தென்மண்டல திமுக பாக முகவர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரை, உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் திமுக தென்மண்டல பாக முகவர்கள் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தென்மண்டலத்திற்கு உட்பட்ட 20 மாவட்டங்களிலுள்ள 58 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 1.90 லட்சம் திமுக பாக முகவர்கள், வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாநாட்டு திடலில் மாவட்டவாரியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. க்யூஆர் கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாநாட்டிற்கு திறந்த வேனில் வந்த முதல்வர், மாநாட்டு திடலின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த சாலையில் வேனில் இருந்தவாறு கட்சியினரை பார்த்து கை அசைத்தவாறு சென்றார்.
முதல்வர் வந்ததும் மாநாட்டு திடலில் இருந்தவர்களும், மேடையில் இருந்தவர் கருப்பு, சிவப்பு நிற திமுக துண்டை கையில் எடுத்து முதல்வரை நோக்கி அசைத்துக் காட்டியவாறு அவருக்கு வரவேற்பு அளித்தனர். கட்சியினரின் வரவேற்பை பெற்றுக் கொண்ட முதல்வர் பின்னர் மேடைக்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டருந்த பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் அன்பழகன் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். முதல்வரை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்திற்கு தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாபெரும் பயிற்சிக்கூட்டங்களை மண்டலவாரியாக நானே சென்று நடத்தினேன். அதனால்தான் அத்தேர்தலில், நாற்பதுக்கு நாற்பது என்று வெற்றி பெற்றோம். கடந்த 2 மாதங்களில் மட்டும் எத்தனை மாநாடுகள் நடத்தியுள்ளோம்.
திருவண்ணாமலையில் 1.50 லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு, திருப்பூரில் 1.50 மகளிர் கலந்து கொண்ட, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மேற்கு மண்டல மாநாடு, விருதுநகரில் ஒரு லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்ட, இளைஞரணி தென் மண்டல மாநாடு, அடுத்து, தஞ்சையில் 1.25 லட்சம் மகளிர் கலந்து கொண்ட, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ டெல்டா மண்டல மாநாடு. இவ்வாறு 2 மாதத்தில் 7 மாநாடுகள் நடத்தி, 9 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோரைச் சந்தித்து நான் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.
அதனால், நான் சவால் விட்டு சொல்கிறேன். இந்தளவிற்கு நம்மைப் போன்று, பூத் லெவலில் இருக்கும் நிர்வாகிகள், இளைஞர்கள், மகளிர் என, தேர்தலுக்கு ஆயத்தமாகும் ஒரு கட்சியை இந்தியாவில் காட்டுங்கள் பார்க்கிறேன். முடியாது. நிச்சயமாக முடியாது. திருச்சியில் மெயின் பிக்சர்: திமுக போன்று அமைப்புரீதியாக வலுவான ஒரு அரசியல் கட்சியை யாராலும் காட்ட முடியாது. இப்போது நாம் காண்பிப்பது அனைத்துமே சும்மா ட்ரெய்லர்தான். திருச்சியில் மெயின் பிக்சர் காண்பிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
மார்ச் 9ம் தேதி திமுக நிர்வாகிகள் அனைவரும் திருச்சியில் திரளப் போகிறோம். 10 லட்சம் பேர் கூடும் மாநாட்டை தமிழ்நாடே பார்க்கப் போகிறது. வெற்றி மேல் வெற்றி: 2019ல் இருந்து அனைத்துத் தேர்தல்களிலும் நம்முடைய கூட்டணிக்கு வெற்றி மேல் வெற்றிதான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முழுமையான வெற்றியை மக்கள் நமக்கு வழங்கினார்கள். அப்போது இருந்ததை விட அதிகமான திட்டங்களை இப்போது நிறைவேற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் சொன்னால், மக்கள் கேட்டதையும் செய்து கொடுத்திருக்கிறோம். மக்கள் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஆன திட்டங்களையும் கொடுத்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறோம். அனைத்து தரப்புகளின் கோரிக்கைகளையும் தீர்த்து வைத்திருக்கிறோம். அதனால், இந்த முறை மிகப் பெரிய வெற்றியை உங்கள் மூலமாக நான் எதிர்பார்க்கிறேன். தனிப்பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைப்போம் என்பதில், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அனைத்துப் பகுதிகளிலும், அனைத்துத் தொகுதிகளிலும் வென்றோம் என்ற செய்திதான் மிக மிக முக்கியம்.
அதற்காகத்தான் இந்தக் கூட்டங்கள், இந்த மாநாடுகள். நாம் அனைவருக்கும் முன்பே, அனைத்தையும் சரியாகப் பிளான் செய்து வைத்திருக்கிறோம். 200 தொகுதிக்கு அதிகமாக… இங்கு வந்திருக்கும் உங்களின் ஒவ்வொரு பூத்திற்கும் எவ்வளவு டார்கெட்? 350 வாக்குகள். இந்த டார்கெட்டை நிறைவேற்றி விட்டாலே, அசால்ட்டாக 2 கோடியே 60 லட்சம் வாக்குகளுக்கு மேல் நாம் வாங்கிவிட முடியும். இந்தத் தேர்தலில், நாம் 2 கோடியே 50 லட்சம் வாக்குகளுக்குக் குறையாமல் வாங்கியே ஆக வேண்டும்.
இதை வாங்கிக் காட்டுவது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு என்ன வேண்டுமோ அந்த உதவிகளைச் செய்து தருவது என்னுடைய பொறுப்பு. 2.50 கோடியா என்று பெரிய நம்பரை யோசித்து யாரும் ஷாக் ஆகாதீர்கள். இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஆளுக்கு 40-50 வாக்குகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு செட் செய்திருக்கும் டார்கெட்டை அச்சீவ் செய்துவிட்டாலே போதும். நான் சொன்ன நம்பர் வந்துவிடும். 200 தொகுதிகள் நிச்சயம். 200 தொகுதிகளுக்குக் கூடுதலாகவும் வெற்றி பெறுவதுதான் நம்முடைய லட்சியம்.
ரிப்பீட் மோடில்…. அடுத்த 2 மாதங்கள். உங்களுக்கும் சரி, எனக்கும் சரி.. நோ ரெஸ்ட். ஒவ்வொரு வாக்காளரையும் நீங்கள் அனைவரும் குறைந்தது 5 முறையாவது நேரில் சந்திக்க வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா? என்னதான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் இப்படி புதுப்புது ஊடகங்கள் வந்தாலும், ஒருவரின் வீட்டுப் படியேறி சென்று, அவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு பணிவாக வாக்கு கேட்கும் பிரசாரத்திற்கு எதுவுமே ஈடாகாது. சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இதை நீங்கள் ரிப்பீட் மோடில் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ‘ரிப்பீட்’ ஆகும். தேர்தல் அன்றைக்கு பூத்துக்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்களிக்கும் வரை, ஓய்வே இருக்க கூடாது. வாக்குப்பதிவு முடிந்து இயந்திரத்தில் சீல் வைத்து, வாகனத்தில் ஏற்றும் வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கடைசி வாக்கு எண்ணி முடிக்கப்படும் வரை கவனமாக இருக்க வேண்டும். திராவிட மாடல் அரசு தொடர்ந்தால்தான், மகளிர் உரிமைத்தொகை போன்ற சமூக வளர்ச்சிக்கான நலத்திட்டங்கள் தொடரும்.
அண்மையில், பிரதமர் மோடி பேசிய பழைய வீடியோ ஒன்று, மறுபடியும் வைரல் ஆனது. பார்த்திருப்பீர்கள். அதில் என்ன சொல்லியிருந்தார்… இலவச பேருந்து பயணத் திட்டத்தால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவதாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த நாளிலிருந்து, பெண்கள், விடியல் பயணம் திட்டத்தில் இலவசமாகப் பயணிக்கிறார்கள். இதுவரைக்கும் சுமார் 900 கோடி பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.
இதனால் ஒவ்வொரு குடும்பமும், மாதா மாதம், சுமார் 800 ரூபாய் சேமிக்கிறார்கள். இதெல்லாம் ஏன் சார் உங்களுக்கு வலிக்கிறது? குரல் தராத எடப்பாடி: நியாயமாக, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கோரிக்கையாக கூட இதையெல்லாம் கேட்கத் துணிச்சல் இல்லாத துரோகியாக அவர் மாறிவிட்டார். இந்திய அளவில் இருக்கும் எதிர்க்கட்சிகளிலேயே திமுகவினர் மேல்தான் பாஜ அரசு அதிகமான ரெய்டுகள் நடத்துகிறார்கள்.
நம்முடைய அமைச்சர்களுக்குத்தான் அதிக அளவில் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாமா என்று பார்க்கிறார்கள். எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக. அதனால், உங்களின் இந்த சிபிஐ, ஈடி, ஐடி என எந்த சித்து விளையாட்டிற்கு நாங்கள் அஞ்சமாட்டோம். என்ன ஆனாலும் சரி, நாங்கள் எழுந்து நிற்போம், ஒரு கை பார்ப்போம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக இவ்வாறு தைரியமாக நின்று போராடுகிற காரணத்தினால்தான் மக்கள் ஆதரவாக நிற்கிறார்கள்.
அதனால்தான் சந்திக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறோம். எட்ட முடியாத வளர்ச்சி: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையின் பதிலுரையில், நம்முடைய திட்டங்களைப் பற்றி அரை மணிநேரம் மிக அழகாக ஆணித்தரமாகப் பேசினார். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், நிறைய புதுமையான திட்டங்கள், முன்னோடித் திட்டங்கள் மூலமாக மக்கள் எப்படி பயனடைந்திருக்கிறார்கள், அதை மற்ற மாநிலங்களும் எவ்வாறு இப்போது பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள் போன்றவற்றையெல்லாம் மிக விளக்கமாக விளக்கினார்.
நாம் நிறைவேற்றிக் கொண்டு வரும் திட்டங்களின் ‘அவுட்புட்’தான், 11.19 விழுக்காடு இரட்டை இலக்க வளர்ச்சி. கூட்டணியில் புதிதாகக் கட்சிகள் இணைகிறார்கள். தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைத்துவிட்டோம். தேர்தல் பரப்புரையையும் அனைவருக்கும் முன்பே நாம் தொடங்கிவிட்டோம். எந்தத் தொகுதி யாருக்கு, வேட்பாளர் யார், இதைத் தலைமைக் கழகம் பார்த்துக் கொள்ளும்.
இன்னும் சொல்கிறேன், நான் கவனித்துக் கொள்கிறேன். அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை. “தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?” என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்புங்கள். தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும் என்றால், திமுக வெற்றி பெற வேண்டும். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
* இந்திய அளவில் இருக்கும் எதிர்க்கட்சிகளிலேயே திமுகவினர் மேல்தான் பாஜ அரசு அதிகமான ரெய்டுகள் நடத்துகிறார்கள். நம்முடைய அமைச்சர்களுக்குத்தான் அதிக அளவில் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாமா என்று பார்க்கிறார்கள். சிபிஐ, ஈடி, ஐடி என எந்த சித்து விளையாட்டிற்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். என்ன ஆனாலும் சரி, நாங்கள் எழுந்து நிற்போம், ஒரு கை பார்ப்போம்.
* உரிமைத்தொகையை முடக்க நினைத்த சதி முறியடிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘‘வெல்லும் தமிழ்ப்பெண்கள் பரப்புரைக்காக, திமுக செயலாளர்கள் – பொறுப்பாளர்கள் கூட்டத்தை வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமாக நடத்தினேன். அதில், ‘ஸ்டாலின் மகளிர் படை மூலமாக, திமுக அரசின் சாதனைத் திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்க்கச் சொல்லியிருக்கிறேன்.
தேர்தலைக் காரணமாக வைத்து, மகளிர் உரிமைத்தொகையை முடக்க நினைத்த சதியை நாம் முறியடித்து, ஐந்தாயிரம் ரூபாய் வழங்கியிருப்பது; அடுத்து அமையப்போகும் நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சியில், மகளிர் உரிமைத்தொகையை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க இருப்பது பற்றி, இந்த ஸ்டாலின் மகளிர் படை, ஒவ்வொரு வீட்டிலும் விளக்கமாக எடுத்துச் சொல்வார்கள்’’ என்றார்.
* கொடுப்பது திமுக அரசு எடுப்பது ஒன்றிய அரசு
முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘‘அண்மையில், நாம் அட்வான்சாக வழங்கிய ஐந்தாயிரம் ரூபாய் உரிமைத்தொகையை, பல ஊடகங்களும் நம்முடைய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்று சொன்னார்கள். அந்தளவிற்கு எதிராளிகள் கணிக்க முடியாதபடி நம்முடைய நகர்வு இருந்தது. மக்கள் இது இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும், அடுத்தது அவர்கள் உடனே சென்றது, வங்கிகளிலிருந்து பணத்தை எடுக்கத்தான்.
அதற்கு என்ன காரணம் தெரியுமா…? எங்கே அந்த ஐந்தாயிரம் ரூபாயை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்வார்களோ என்று பயந்த மக்கள், அந்தத் தொகையை உடனடியாக ‘வித்-டிரா’ செய்யச் சென்றுவிட்டார்கள். இதுதான், மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், ஒன்றிய அரசு மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் வித்தியாசம். மக்களுக்காகக் கொடுத்தால் அது திமுக அரசு. மக்களிடமிருந்து எடுத்துக் கொண்டால் அது, ஒன்றிய பாஜ அரசு’’ என்றார்.
* எய்ம்ஸ் என்னாச்சு? பிரதமரிடம் கேளுங்கள்…
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘மார்ச் 1ம் தேதி மதுரைக்கு பிரதமர் வரப்போகிறார். அவரிடம் மதுரை மக்கள், ஏன் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொடுக்கவில்லை என்று கேட்க வேண்டும்? கேட்பீர்களா… கோவை மெட்ரோ ரயில் திட்டம் எங்கே? ஏன் தமிழ்நாட்டிற்கு எந்தச் சிறப்புத் திட்டங்களையும் கொடுக்கவில்லை? கீழடி அறிக்கையை ஏன் வெளியிட மாட்டேன் என்கிறீர்கள்? எய்ம்ஸ் இன்னமும் வரவில்லையே என்று கேட்க வேண்டும்?
நீட் தேர்விலிருந்து ஏன் விலக்கு தர மறுக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும்? மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை வஞ்சிக்க, எங்களுக்கான கல்வி நிதியை முடக்குவது நியாயமா என்று கேட்க வேண்டும்’’ என்றார்.
