சென்னை,மார்ச் 2: பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி 26ம் தேதி நிறைவுபெறுகிறது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும். இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளைத் தடுக்க 4,540 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர்,இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள்கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். அதேபோல், விடைத்தாள்களில் எவ்வித சிறப்புக் குறியீடு, தேர்வெண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது. மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கூடுதல் நேரம் உட்பட சிறப்பு சலுகைகள் வழங்குதல் சார்ந்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும். தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 14417 மற்றும் 94983 83075, 94983 83076 எண்களை தொடர்புகொள்ளலாம்.
நம்பிக்கையா.. மகிழ்ச்சியா எழுதுங்க: தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும், பதற்றமின்றியும் தேர்வை அணுக ேவண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
தமிழ்நாட்டில் மாணவச் செல்வங்களுக்கான மேல்நிலை பொதுத்தேர்வு இன்று முதலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 11ம் தேதி முதலும் தொடங்க இருக்கிறது. மேல்நிலைத் தேர்வை 7,99,692 மாணவ மாணவியரும், பத்தாம் வகுப்புத் தேர்வை 8,82,806 மாணவ, மாணவியரும் எழுத உள்ளனர்.
உயர்கல்வியே எங்கள் இலக்கு என்னும் உறுதியோடு ஆண்டு முழுவதும் ஊக்கத்தோடு படித்து உங்கள் குறிக்கோளின் நுழைவு வாயிலான மேல்நிலை, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளீர்கள். கருத்தாய்ப் படித்து கல்விக் கடமையாற்றி அதன் பலன் கனியும் காலமிது. “என்னால் முடியும்” என்னும் மந்திரச் சொல்லை மனதில் பதியுங்கள். அறிவில் தெளிவும், மனதில் துணிவும், செயலில் உறுதியும் இருந்தால் தேர்வு பற்றிய அச்சம் தேவையில்லை. தேர்வுகளை முனைப்புடனும், முழு கவனத்துடனும் எழுதுங்கள். இக்காலத்தில் உங்கள் உடல் நலனும் மன நலனும் மிகவும் அவசியமானது. சத்தான உணவும், போதுமான தூக்கமும், மன அமைதியும் தேர்வுகளை எதிர்கொள்ளத் துணை நிற்கும். நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும், பதற்றமின்றியும் தேர்வை அணுகுங்கள். உங்கள் இலட்சியப் பாதையில் சிறிது தளர்ச்சி வந்தாலும் பதற்றமின்றி முயற்சி செய்யுங்கள்.
உழைப்பிற்கு ஏற்ற பலனை நிச்சயம் அடைவீர்கள். ஒவ்வொருவருக்குமான வாய்ப்பு பரந்து விரிந்து கிடக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் உயர் கல்வி இலக்கினை அடைய புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற சிறப்பான திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அன்புக் குழந்தைகளே! மனவலிமையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் உங்கள் வெற்றிப்பாதைக்கான படிக்கட்டுகள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். உங்கள் உயர்வு தமிழ்நாட்டின் வளர்ச்சி. தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் அனைவரும் சிறப்பான வெற்றி பெற என் உளப்பூர்வமான வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
