- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- திமுக தலவம்
- முதல் அமைச்சர்
- கே
- ஸ்டாலின்
- அல்வர்பெட், சென்னை
- அன்னா மெமோரியல்
- சென்னை மெரினா
சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 73வது பிறந்த நாள். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு காலை 8 மணிக்கு வந்தார். அங்கு அவர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்கினார்.
இதைத்தொடர்ந்து, கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், சிவசங்கரன், மூர்த்தி, மு.பெ.சாமிநாதன், ஆவடி நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, முன்னாள் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏக்கள் க.சுந்தர், இ.பரந்தாமன், தாயகம் கவி, மயிலை த.வேலு, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், பகுதி செயலாளர் மதன் மோகன், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய 105 ஊழியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பெரியார் திடல் சென்று பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அங்கு அவரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி வரவேற்றார். பின்னர் கோபாலபுரம் இல்லம் சென்று, கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார். தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். மேலும் சிஐடி காலனி இல்லத்தில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ராஜாத்தி அம்மாவிடம் பிறந்தநாள் வாழ்த்தும் பெற்றார். அப்போது மு.க.ஸ்டாலினுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் வீடு திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அதிகாரிகளும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் சென்னை அறிவாலயத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு தொண்டர்கள் மத்தியில் அவர் கேக் வெட்டினார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் அனைவரிடம் இருந்தும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக புத்தகம் மற்றும் சால்வை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரது மகன் ஒ.பி.ரவிந்திரநாத் உடன் இருந்தார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதே போல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தேர்தல் பணிக்குழு செயலாளர் கழக குமார் உடன் இருந்தார். விசிக சார்பில் மாநில தலைவர் திருமாவளவன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநில செயராளர் முத்தரசன், துணை செயலாளர்கள் ரவி, பெரியசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் சார்பில் மாநில செயலாளர் பெ.சண்முகம், முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மனித நேய மக்கள் கட்சி சார்பில் மாநில தலைவர் எம்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதே போல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், தவாக கட்சி தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியசு உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி ஆகியோரும் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு:
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்! அவற்றைக் காப்பது நம் கடமை. உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73ம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன். உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன்.
நம் தமிழினத்தின் லட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது. சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால்-நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்து கொள்வேன். இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி. பெரியார்-அண்ணா-கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
4 மணி நேரத்துக்கு மேலாக தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்த மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 9.40 மணிக்கு வாழ்த்துக்களை பெற தொடங்கினார். அவருக்கு கட்சியினர் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் முதல்வருக்கு சால்வை, புத்தகம், பூங்கொத்து, பழங்கள், சிற்பங்கள் மற்றும் வித,விதமான பரிசுகளை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஒவ்வொரு பிறந்தநாளிலும் கட்டுங்கடங்காத கூட்டம் நிரம்பி வழியும். ஆனால், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வாழ்த்து தெரிவிக்க வந்த அனைவரிடமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை பெற்றார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தொண்டர்களின் வாழ்த்து மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நனைந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களுக்கு கட்சியினர் சார்பில் மதியம் உணவு, பிஸ்கெட், தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
முதல்வருக்கு ரஜினி பிறந்தநாள் வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், திமுக சார்பில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் ரஜினிகாந்த் பேசியதாவது:
அரியணை ஏறுவதற்கு அவரசப்படாமல், கட்சியின் ஒரு தொண்டனாக, இளைஞரணி தலைவராக, எம்எல்ஏவாக, மேயராக, துணை முதல்வராக பணியாற்றி, அதற்கு பிறகு மக்களின் பெரும் ஆதரவோடு அரியணை ஏறியவர் ஸ்டாலின். பாஜ மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முதலமைச்சர் ஸ்டாலினை எந்தளவு விமர்சனம் செய்தவர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், ஹெச்.ராஜா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தவர் ஸ்டாலின். இவை அனைத்தும் ஒரு நல்ல தலைவனுக்கான பண்பு மற்றும் கண்ணியமான குணம். எனக்கு அவரிடம் பிடித்தது, அவரது ஒழுக்கம்தான். அதற்கு மேல் அவரது அணுகுமுறை எனக்கு பிடிக்கும். பொதுவாழ்க்கைக்கு அது அவசியமான ஒன்று. வசீகரமான புன்னகைக்கு சொந்தக்காரர் அவர். இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
