×

சபரிமலைக்கு இளம்பெண்கள் வருவதை தடுத்ததால் கேரள அரசு என்னை சிறையில் அடைத்தது: ஜாமீன் மனுவில் தந்திரி குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: சபரிமலையில் இளம்பெண்கள் வருவதை தடுத்ததால் தான் கேரள அரசு என்னை கைது செய்து சிறையில் அடைத்தது என்று ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் குற்றம்சாட்டியது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் திருட்டு வழக்கில் சபரிமலை மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளியான உண்ணிகிருஷ்ணன் போத்திக்கும், தந்திரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்றும், தந்திரி மற்றும் அவரது மனைவியின் பெயரில் ரூ. 2 கோடிக்கு மேல் பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகளில் இருந்து ஜாமீன் கோரி தந்திரி கண்டரர் ராஜீவரர் கொல்லம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது தந்திரிக்கு ஜாமீன் வழங்க சிறப்பு புலனாய்வுக் குழு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் கடந்த இரு தினங்களுக்கு முன் தந்திரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தந்திரிக்கு எதிராக சிறப்பு புலனாய்வுக் குழு எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என்று நீதிமன்றம் ஜாமீன் உத்தரவில் கூறியிருந்தது. ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து கைதாகி 41 நாட்களுக்குப் பின்னர் தந்திரி சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்நிலையில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தந்திரி குறிப்பிட்டிருந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன் விவரங்கள் வருமாறு: உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அரசை திருப்திப்படுத்துவதற்காக சபரிமலையில் இளம்பெண்களை அழைத்துவர சில போலீஸ் அதிகாரிகள் திட்டம் தீட்டினர். ஆனால் அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். சபரிமலையில் இளம்பெண்களை அனுமதித்தால் பூஜைகளை நிறுத்தி கோயிலை விட்டு வெளியேறிவிடுவேன் என்று நான் கூறினேன். கோயில் காரியங்களில் அரசியல் கூடாது என்றும் நான் கூறினேன். மேலும் சபரிமலை கோயிலில் வருடத்தில் எல்லா நாட்களிலும் நடை திறக்க அரசு வற்புறுத்தியது. அதற்கும் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதனால் தான் என்னை பழி வாங்குவதற்காக கேரள அரசு இந்த வழக்கில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தது. இவ்வாறு தந்திரி தன்னுடைய ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Tags : Kerala government ,Sabarimala ,Thanthi ,Thiruvananthapuram ,Thanthi Kandarar Rajeevar ,Kerala ,
× RELATED “எரிசக்தி நிலையங்கள் மீதான...