புதுடெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு ஒன்றை நேற்று விசாரணைக்கு எடுத்துள்ளது. அதில், ‘‘தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பெயரை பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி செயல்படுவதை புகார்களின் மூலம் தெரியவந்துள்ளது. அப்படி கிடைக்கப்பெற்ற புகார்களை ஆராயும் போது போலியான சில நிறுவனங்கள் செயல்பட்டது தெரியவந்துள்ளது. எனவே தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பெயரை தவறாக பயன்படுத்தும் அல்லது அதுபோன்று பயன்படுத்தும் தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்டவை கண்டறிந்து விதிமுறைகள் மீறிப் பெறப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட பெயர்களை இரண்டு வாரங்களுக்குள் ரத்து செய்வதோடு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மேலும் இனி வரக்கூடிய நாட்களில் இதுபோன்ற பெயர்கள் பதிவு செய்யும்போது அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
