ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோவில் வலதுசாரி குழுவான கர்னி சேனாவின் செய்தித் தொடர்பாளர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட நபர், சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் மக்களவையில் 25 காங்கிரஸ் எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவை வார்த்தைகளால் திட்டியதால் அனைத்து பாஜ மற்றும் கர்னி சேனா தொண்டர்களும் கோபமடைந்தாக வீடியோவில் கூறுகின்றார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் ராகுல்காந்தியே கவனமாக கேளுங்கள். நாங்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்களை சுடுவோம். 25 எம்பிக்கள் அனைவரையும் ஒவ்வொருவராக சுட்டுக்கொல்வோம்” என்றும் அந்த வீடியோவில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் போலீசார் தாமாக முன்வந்து கோட்டாவில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
* ஆர்எஸ்எஸ்-பாஜ ஒரு கோட்சே தொழிற்சாலை
மிரட்டல் வீடியோ குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அவர், ‘ஆர்எஸ்எஸ்-பாஜ சுற்றுச்சூழல் அமைப்பு ஒரே கோட்சே தொழிற்சாலை. ராகுல்காந்தி மற்றும் 25 எம்எல்ஏக்களுக்கு எதிராக கர்னி சேனா என்ற அமைப்பால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தனிப்பட்டதல்ல. இது ஒரு முன்னறிந்து ஏற்பாடு செய்யப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும்’என்று தெரிவித்துள்ளார்.
