×

நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மூலம் ரூ.70 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: கர்நாடகாவில் ரூ.2000 கோடி, தமிழ்நாட்டில் ரூ.1200 கோடி; பிரியாணி கடைகளில் ஏஐ மூலம் நடத்திய ஆய்வில் பகீர்

ஐதராபாத்: ஐதராபாத் பிரியாணி உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனை மூலம் இந்தியா முழுவதும் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிரியாணி உணவகங்களில் அதிகாரிகள் வழக்கமான சோதனை நடத்தினார்கள். அப்போது பல லட்சக்கணக்கான பில்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய ஏஐ வசதியை பயன்படுத்தினர். அப்போது பல உணவகங்கள் உண்மையான வருவாயை மறைக்க பில்லிங் மென்பொருளை கையாண்டது தெரிய வந்தது.

இதன் மூலம் அழிக்கப்பட்ட பில்களை ஏஐ கண்டுபிடித்துக்கொடுத்தது. இதன் மூலம் பல உணவகங்கள் அதிக வருவாய் பெற்றதும், ஆனால் அவர்கள் மிகக் குறைவாக கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய உணவகங்களில் இந்த சோதனையை நடத்தினர். இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில் சுமார் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பில்கள் தயாரிக்க உணவகங்கள் பயன்படுத்தும் ஒரு பெரிய கணினி அமைப்பைப் ஏஐ மூலம் படிப்பதன் மூலம் இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டது. இந்த பில்லிங் மென்பொருளை நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் பயன்படுத்துகின்றன. கணினி கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அதிகாரிகள் கிட்டத்தட்ட 1.77 லட்சம் உணவகங்களின் பில் பதிவுகளைச் சரிபார்த்து, சுமார் 60 டெராபைட் தரவை ஆய்வு செய்தனர். வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய பிறகு, பல பில்கள் அமைதியாக நீக்கப்பட்டன அல்லது அமைப்புக்குள் மாற்றப்பட்டன என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

தடயவியல் தரவு பகுப்பாய்வு மற்றும் ஏஐ கருவிகள் மூலமாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில் கடந்த 2019-2020ம் நிதியாண்டில் இந்த உணவகங்கள் குறைந்தது ரூ.70ஆயிரம் கோடி மதிப்புள்ள விற்பனையை மறைத்துள்ளது கண்டறியப்பட்டது. மறைக்கப்பட்ட வருமானத்திற்கான வரி மற்றும் அபராதத்தை அதிகாரிகள் இன்னும் கணக்கிடவில்லை. இந்த மென்பொருள் மூலம் இந்தியா முழுவதும் சுமார் ரூ.13317 கோடி மதிப்பிலான செலுத்தப்பட்ட பில்களின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் ரூ.5100 கோடி பில் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள சுமார் 40 உணவகங்களில் மட்டும் நடத்தப்பட்ட விரிவான நேரடி மற்றும் டிஜிட்டல் விசாரணைகளில் சுமார் ரூ.400கோடி அளவுக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அதிகபட்சமாக ரூ.2000கோடி, தெலங்கானாவில் ரூ.1500கோடி, தமிழ்நாட்டில் ரூ.1200கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. மொத்த விற்பனையில் சுமார் 27சதவீதம் மறைக்கப்பட்டுள்ளது. விற்பனையை மறைப்பதற்கு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எப்படி நடந்தது இந்த முறைகேடு?
* உணவகங்களில் பொதுவாக அனைத்து பரிவர்த்தனைகளும் பணம், கார்டுகள், யுபிஐ ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் ஊழியர்கள் பணத்தைத் திருட முடியாது. ஆனால் உரிமையாளர்கள் இந்த வசதியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளனர்.
* இதில் ரொக்க பில்களை மட்டுமே நீக்குவது ஒரு பொதுவான தந்திரம். மற்றொரு தந்திரம் சில நாட்களுக்கு அல்லது ஒரு மாதம் முழுவதும் அனைத்து பில்களையும் அழித்துவிட்டு, பின்னர் மிகக் குறைந்த வருமானத்தைக் காட்டும் வரியை தாக்கல் செய்வது புதிய வழியாகும்.
* 6 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.2.43 லட்சம் கோடி உணவக விற்பனையை ஆய்வு செய்த போது ரூ.70 ஆயிரம் கோடி மெகா மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
* முதலில் ஐதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் தொடங்கியது. மோசடியின் அளவு பெரிய அளவில் விரிந்ததால் விசாரணை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
* இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று தெரிவித்த அதிகாரிகள் பல பில்லிங் மென்பொருள் அமைப்புகள் மூலம் மேலும் இதே போன்ற முறைகேடுகளை மறைத்து வைத்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

Tags : Karnataka ,Tamil Nadu ,Hyderabad ,India ,Hyderabad, Telangana ,
× RELATED தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி...