தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட 35வது வார்டான குரோம்பேட்டை பகுதியில், எம்.ஐ.டி மேம்பாலத்தின்கீழ் குப்பைக் கழிவுகள் கொட்டும் இடமாக இருந்த பகுதியை சுத்தம் செய்து, அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்து தரவேண்டும் என்று இ.கருணாநிதி எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று, குரோம்பேட்டையில் எம்.ஐ.டி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ரூ.46.80 லட்சம் மதிப்பில் புதிதாக சிறுவர் விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம், கலையரங்க மேடை அடங்கிய பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், குரோம்பேட்டையில் ரூ.46.80 லட்சம் மதிப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு திடல் மற்றும் உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவை நேற்று மக்களின் பயன்பாட்டுக்கு இ.கருணாநிதி எம்எல்ஏ திறந்துவைத்தார். இதில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணைமேயர் கோ.காமராஜ், ஆணையர் பாலச்சந்தர், மண்டல குழுத் தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பகுதி செயலாளர் ஏ.கே.கருணாகரன், மாமன்ற உறுப்பினர் சங்கீதா விஜய், மகாலட்சுமி கருணாகரன், வட்ட செயலாளர் விஜய், ஒப்பந்ததாரர் சிம்லா சரவணன் உள்பட பலர் கொண்டனர்.
