×

கழிவு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

 

சென்னை: திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள்-2026ன்படி பெருமளவு கழிவு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்திய அரசு, திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026 (Solid Waste Management Rules, 2026) குறித்த அரசிதழ் அறிவிப்பை 28.01.2026 அன்று வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் 01.04.2026 முதல் அமலுக்கு வரப்படவுள்ளது. திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள், 2026ன் படி, கீழ்கண்ட அளவுகோள்களில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி நிறுவனங்கள் / நிலையங்கள் “பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள்” (Bulk Waste Generators – BWG) ஆக வகைப்படுத்தப்படுகின்றன:

20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த தள பரப்பளவு கொண்ட கட்டடம்; அல்லது
தினசரி 40,000 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீர் பயன்பாடு; அல்லது
தினசரி 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவு உற்பத்தி செய்பவர்கள்.
இந்த வரையறை, நிறுவன பயனாளர்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்கள்/சொசைட்டிகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஐ.டி. பூங்காக்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்களையும் உட்கொள்ளும். திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள்-2026ன் விதிமுறைகளின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி வரம்பிற்குள் உள்ள அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கும் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகின்றன:

1.கட்டாய பதிவு: பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணைய தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.

2.காலக்கெடு: இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தகுதி உடைய அனைத்து பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களும் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவை நிறைவு செய்ய வேண்டும்.

3.பின்பற்றாதவர்களுக்கு நடவடிக்கை: குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யாதவர்களுக்கு திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள்-2026ன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் பின்வருவனவற்றை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்:

பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் தங்களால் உருவாக்கப்படும் கழிவுகளை, மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள், அபாயகரமான வீட்டு உபயோகக் கழிவுகள் என்று தரம் பிரித்து அவற்றை அவற்றிற்குரிய குப்பைத் தொட்டிகளில் தனித்தனியே சேகரித்து வைத்து பெருநகர சென்னை மாநகராட்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட கழிவுகள் மீட்டெடுப்பவர்களிடம் தனித்தனியே ஒப்படைக்க வேண்டும்.

பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் தாங்கள் உண்டாக்கும் உயிரியல் கழிவுகளை தங்கள் வளாகத்திலேயே உரமாக்கல் / உயிரி எரிவாயுவாக்குதல் போன்ற முறைகளில் செயல்படுத்த வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி வருடாந்திர அறிக்கையை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

உலர்கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்பு பராமரிப்புக் கழிவுகளை உள்ளூர் நிர்வாக அமைப்பு அல்லது அதனால் அங்கீகரிக்கப்பட்ட முகமைக்கு ஒப்படைக்க தேவையான ஏற்பாடுகளை செய்தல்.

பதிவிற்கான தனிப்பட்ட இணையதளம் விரைவில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படும். மண்டல அலுவலர்கள் (மண்டலம் 1 முதல் 15 வரை) நியமிக்கப்பட்ட பணியாளர்கள்/தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் (SBM – Animator) பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களுக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவார்கள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் நிலையான கழிவு மேலாண்மையும் உறுதி செய்ய, அனைத்து நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களும் இந்த அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 

Tags : Chennai Municipality ,Chennai ,Metropolitan Chennai Municipality ,Government of India ,
× RELATED தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தை திறந்து...