×

சென்னையில் பைக்குகள் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது: போலி ஆர்சி புத்தகம் மூலம் அதிக விலைக்கு விற்பனை

 

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாரதி (34). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். கடந்த 6ம் தேதி இரவு இவரது பைக் திருடுபோனது. இதுகுறித்து புகாரின்படி, கொளத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தார். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 2 பேர் பைக்கை திருடிச்செல்வது பதிவாகியிருந்தது. இதன்படி, சென்னை ராமாபுரம் கொத்தாரி 9வது தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன், நெசப்பாக்கம் இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கொளத்தூர் பகுதிக்கு வந்து பைக்கை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் கொரட்டூர், மாங்காடு. பீர்க்கன்காரணை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து 6 பைக்குகளை திருடியது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் திருடும் பைக்குகளை திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா தச்சம்பாடி பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (19) என்பவரிடம் விற்பனை செய்துள்ளனர். ஜெகதீஷ் சென்னையில் பைக் மெக்கானிக்காக வேலை செய்தபோது சிறுவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு ஜெகதீஷ் தனது சொந்த ஊருக்கு சென்று அங்கு பைக்குகளை விற்பனை செய்துள்ளார். விபத்தில் சிக்கும், பழுதாகி இருக்கும் பைக்குகளை பார்த்து அந்த வண்டியின் ஆர்சி.புக் வைத்துக்கொண்டு அந்த எண்களை திருட்டு வண்டியில் பதிவிட்டு அத மறுவிற்பனை செய்துள்ளனர். இவ்வாறு தெரியவந்துள்ளது.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு போலீசார் சென்று ஜெகதீஷை கைது செய்து மேலும் 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். சென்னையில் திருடும் பைக்குகளை 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். இதன்பின்னர் தன்னிடம் உள்ள ஆர்சி புத்தகத்தை வைத்து ஒரு பைக்கை 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து சிறுவர்கள் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து அவர்களை சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஜெகதீஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பைக் திருடர்களை பிடித்த போலீசாரை கொளத்தூர் துணை கமிஷனர் குமார் பாராட்டினார்.

 

Tags : Chennai ,Perampur ,Jayabharathi ,Kolathur Anna Anjugam Nagar, Chennai ,Kolathur Criminal Division ,
× RELATED நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான...