×

ஜெனீவாவில் 2வது நாளாக ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

ஜெனீவா: அமெரிக்க தலைமையில் ரஷ்யா-உக்ரைன் இடையே ஜெனீவாவில் நேற்று இரண்டாவது நாளாக அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ரஷ்யா -உக்ரைன் இடையேயான போர் நான்காவது ஆண்டை நெருங்குகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகி அண்டை நாடுகளில் தஞ்சம்புகுந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே துருக்கி, அபுதாபி ஆகிய இடங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும் எந்த பலனும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், 3வது சுற்று அமைதி பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் உக்ரைன் சார்பில், அந்த நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ருஸ்தம் உமரோவ், ரஷ்யா சார்பில் அந்த நாட்டின் அதிபர் புடினின் நெருங்கிய உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி கலந்து கொண்டனர். அமெரிக்கா சார்பில் டிரம்பின் சிறப்பு பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்கோ, ஜாரட் குஷ்நரும் கலந்து கொண்டனர். இரண்டு நாள் பேச்சுவார்த்தை நேற்று முடிந்தது. முன்னதாக பேச்சுவார்த்தை நேற்று துவங்குவதற்கு முன் பேட்டியளித்த ஸ்டீவ் விட்காப் ரஷ்ய உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

* டிரோன் தாக்குதல்
இதற்கிடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போது உக்ரைனின் தெற்கு பகுதியான ஜபோரிஜியாவில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு பெண் பலியானார். 7 பேர் படுகாயமடைந்தனர்.

Tags : Russia ,Ukraine ,Geneva ,US ,
× RELATED ரஷ்யாவிடம் இருந்து 2000 குழந்தைகள் மீட்பு: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி