திருவள்ளூர், பிப்.19: திருவள்ளுர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு செய்து, பார்வையிட்டார். திருவள்ளுர் ஒன்றியம், வேப்பம்பட்டில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ரூ.56 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கடவு எண்:13 கட்டுமான பணி, செவ்வாய்பேட்டையில் ரூ.8.1 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கடவு எண்:15 கட்டுமான பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, நேற்று மாவட்ட கலெக்டர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். இதனைத்தொடர்ந்து, காக்களுர் ஏரி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.51 கோடி மதிப்பில் புனரமைப்பு பணி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்படும் முதலமைச்சரின் சிறிய விளையாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்து, பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் ரூ.44.5 கோடி மதிப்பில் அத்திப்பட்டு – நந்தியம்பாக்கம் இடையே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளையும், மீஞ்சூர் ஊராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளையும், மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி துறை சார்பில் ரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அறிவுச்சார் மையம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பில் தாமரைகுளம் சுற்றி நடைபாதை மற்றும் பூங்கா கட்டுமான பணிகளையும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் தணிகாச்சலம், திருவள்ளுர் வட்டாட்சியர் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் கோவேந்தன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணிமோகன்ராஜ், உதவி செயற்பொறியாளர் கஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குணசேகரன், உதவி பொறியாளர்கள் யாஸ்மின், நரசிம்மன், ஐசக் கெவின், பேரூராட்சி செயல் அலுவலர் மகேஷ்வரி, காக்களூர் ஊராட்சி செயலாளர் சரவணன்மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
