சென்னை, பிப்.19: 2026-27ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் மெரினாவில் ரோப் கார் வசதி, நீர்நிலைகளை மீட்க ரூ.100 கோடி ஒதுக்கீடு, மாநகராட்சி பள்ளிகளுக்கு சிறப்பு திட்டங்கள் என 90 முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மாநகராட்சியின் 2026-27ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று களைகட்டியது. மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் மற்றும் மண்டலக் குழுத் தலைவர்கள் முன்னிலையில், சென்னையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் 90 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ‘திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராகவும், தொழில்துறையில் முன்னோடியாகவும் திகழ்கிறது’ என்று கூறி தனது உரையைத் தொடங்கிய மேயர் பிரியா, எளிய மக்களின் வாழ்வாதாரம் முதல், நகரத்தின் உள்கட்டமைப்பு வரை அனைத்தையும் உள்ளடக்கிய பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
சுற்றுலாவில் ஒரு மைல்கல்லாக மெரினாவில் ‘ரோப் கார்’
சென்னை வாசிகளின் நீண்ட நாள் கனவான ஒரு சர்வதேசப் பொழுதுபோக்கு அம்சம் இம்முறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை வான்வழியாகப் பயணிக்கும் ‘கயிறு வழித்தடம்’ (ரோப் வே கார்) வசதி பொது-தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படவுள்ளது. இனி சென்னை மாநகரின் அழகையும், வங்கக் கடலின் பிரம்மாண்டத்தையும் வானில் மிதந்தபடியே ரசிக்கும் வாய்ப்பு பொதுமக்களுக்குக் கிடைக்கவுள்ளது.
மார்டன் ஆகும் மாநகராட்சி பள்ளிகள்
மாநகராட்சிப் பள்ளிகள் என்றாலே பழைய கட்டிடங்கள் என்ற பிம்பத்தை உடைத்து, தனியார் பள்ளிகளே வியக்கும் வகையிலான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட 250 பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள், சமையற்கூடங்கள் மற்றும் சுற்றுச்சுவர்களுக்கு ஒரே மாதிரியான ‘வண்ணக் குறியீடு’ முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பள்ளிச் சூழலை வண்ணமயமாக்கும்.
மேலும், மாணவர்கள் அறிவியல் ரீதியாகச் சிந்திக்க, நவீன வசதிகளுடன் கூடிய ‘அறிவியல் மையம்’ புதிதாக உருவாக்கப்படவுள்ளது. 100 பள்ளிகளுக்கு ரூ.60 லட்சம் செலவில் உயர்தர அச்சுப்பொறிகள், மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க 46 உயர்நிலைப் பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்கள் நியமனம் எனப் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் மாணவர்கள் சிரமமின்றிச் செல்ல ரூ.4 கோடியில் 11 புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளன.
மருத்துவத்தில் ‘ஹை-டெக்’ புரட்சி
சுகாதாரத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்களை அச்சுறுத்தும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிய, 360 சுகாதார மையங்களிலும் ரூ.1 கோடியில் நவீன பரிசோதனை கருவிகள் வழங்கப்படவுள்ளன. அதேபோல், காசநோயை எக்ஸ்-ரே மூலம் துல்லியமாகக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பயன்படுத்தப்படவுள்ளது. செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க 720 பேருக்கு ‘டேப்லெட்’ கணினிகள் வழங்கப்படவுள்ளன.
நீர்நிலைகளை மீட்க ரூ.100 கோடி ஒதுக்கீடு
சென்னையின் முக்கியப் பிரச்னையான வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் மேலாண்மைக்கு பட்ஜெட்டில் பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டலம் 7-ல் உள்ள அம்பத்தூர் ஏரி, மண்டலம் 2-ல் உள்ள மஞ்சம்பாக்கம் ஏரி உள்ளிட்ட 30 நீர்நிலைகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்பட்டு, நீர் சேமிப்புத் திறன் அதிகரிக்கப்படும். இது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு
நகரின் நெரிசல் மிகுந்த பகுதியான சேத்துப்பட்டு டாக்டர் குருசாமி பாலம் அருகே, ரயில்வே பாதையைக் கடக்க ரூ.25 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. மேலும், வேளச்சேரி வீராங்கல் ஓடை, வட அகரம் விருகம்பாக்கம் கால்வாய், தி.நகர் மாம்பலம் கால்வாய், கொடுங்கையூர் ஆகிய இடங்களில் பழுதடைந்த பாலங்களுக்குப் பதிலாகப் புதிய பாலங்கள் கட்டப்படவுள்ளன. பள்ளி மாணவர்கள் விபத்தின்றிச் செல்ல ரூ.200 கோடியில் ‘பாதுகாப்பான வழித்தடங்கள்’ அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் மனநலனுக்கு ‘மகிழ்ச்சிப் பிரிவு’
இந்தியாவிலேயே புதுமையாக, சென்னை மக்களின் மனநலத்தை மேம்படுத்தவும், சமூக இணைப்பை வலுப்படுத்தவும் ‘மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்குப் பிரிவு’ என்ற புதிய துறை ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ளது. இது குழந்தைகளைத் திரை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு, பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டுகளின் பக்கம் திருப்பும் முயற்சியாகும்.
டிஜிட்டல் நிர்வாகம்
சொத்துவரி செலுத்துவோர் எளிதாகச் சேவைகளைப் பெற, ரசீதுகளை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பும் வசதியும், வரி வசூலிப்பவர்களிடம் உள்ள கருவிகளில் ‘கியூஆர் குறியீடு’ வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நகரின் வெள்ள அபாயம் மற்றும் போக்குவரத்தைக் கண்காணிக்க ‘டிஜிட்டல் ட்வின்’ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
பிற முக்கிய அறிவிப்புகள்
மகப்பேறு மருத்துவமனைகளுக்கு ரூ.29 லட்சத்தில் 40 ‘மல்டிபாரா மானிட்டர்கள்’, பச்சிளம் குழந்தைகளுக்கான 19 ‘பல்ஸ் ஆக்சிமீட்டர்’ கருவிகள் மற்றும் நீரிழிவு விழித்திரை நோயைக் கண்டறிய ரூ.2.30 கோடியில் நவீனக் கருவிகள் வழங்கப்படும். 5 சமுதாய மகப்பேறு மருத்துவமனைகளில் (திருவொற்றியூர், இராயபுரம், பாடி, செனாய் நகர், அடையாறு) வார்டுகளுக்கு ரூ.70 லட்சத்தில் ‘சென்ட்ரலைஸ்டு ஏசி’ வசதி செய்யப்படும். புழல், பாடி, போரூர் ஆகிய 3 மருத்துவமனைகளில் ரூ.3 கோடியில் இயற்கை மருத்துவப் பிரிவு மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படும். வெயிலில் வாடும் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களின் தாகத்தைத் தணிக்க, கோடைகாலம் முழுவதும் அவர்களுக்குக் குளிர்ச்சியான மோர் வழங்கப்படும்.
பெருங்குடியில் 20 ஏக்கர் பரப்பளவில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட உரம் தயாரிக்கும் நிலையம் மற்றும் மணலியில் ரூ.15 கோடியில் புதிய நிலையங்கள் அமைக்கப்படும்.குப்பைகளை அகற்ற ரூ.9.6 கோடியில் 30 சிஎன்ஜி டிப்பர் லாரிகள், சாலைகளைச் சுத்தம் செய்ய ரூ.8 கோடியில் 20 பேட்டரி வாகனங்கள், காற்று மாசைக் கட்டுப்படுத்த 8 ‘மிஸ்ட் ப்ளோயர்’ வாகனங்கள் வாங்கப்படும். மாநகராட்சியில் உள்ள 200 பூங்காக்கள் ரூ.60 கோடியில் அறிவியல் பூர்வமாகப் பொலிவுபடுத்தப்படும். 25 பூங்காக்களில் மழைநீரை உறிஞ்சும் ‘ஸ்பாஞ்ச் பார்க்’ தொழில்நுட்பம் ரூ.5 கோடியில் செயல்படுத்தப்படும். 14 மண்டலங்களிலும் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்படும். ஹேடோஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை, தாலுகா அலுவலக சாலை ஆகிய இடங்களில் உள்ள நடைமேம்பாலங்களில் ரூ.1.50 கோடியில் ‘லிப்ட்’ வசதி செய்யப்படும்.
நகரில் உள்ள 50 மயான பூமிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். பேருந்து சாலைகளில் 200 கி.மீ தூரத்திற்கு மின்கம்பிகளை பூமிக்கடியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். 78,130 பழைய விளக்குகள் எல்இடி (LED) விளக்குகளாக மாற்றப்படும். என மேயர் தனது உரையில் தெரிவித்தார்.

