×

தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு ரூ.55 கோடியில் புதிய கட்டிட பணி

சென்னை, பிப்.14: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் புதிய கட்டிட பணிகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் புதிதாக தாம்பரம் மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரகம், சென்னை, தாம்பரம், ஆவடி என 3ஆக பிரிக்கப்பட்டது. இதில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தாம்பரம், காந்தி சாலையில் அரசுக்கு சொந்தமான சுமார் 100 கோடி மதிப்புள்ள இரண்டரை ஏக்கர் நிலம் தனியார் ஒருவர் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அந்த நிலத்தை கையகப்படுத்தி அதில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றி நிலத்தை தாம்பரம் மாநகர காவல் ஆணையராக கட்டிடம் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு அங்கிருந்த கட்டிடங்களை போலீசார் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் மீட்டனர்.

இந்நிலையில், தாம்பரம் மாநகர காவல் ஆணையரக புதிய கட்டிடம் ரூ.55 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் உள்பட 8 தளம் அமைக்க திட்டமிடப்பட்டு கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரக புதிய கட்டிட கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதேபோல், திமுக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் ரூ.573.05 கோடி செலவில் 3,418 காவலர் குடியிருப்புகள், ரூ.73.65 கோடி செலவில் 56 காவல் நிலைய கட்டிடங்கள், ரூ.180.16 கோடி செலவில் 31 காவல்துறை இதர கட்டிடங்கள் மற்றும் ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி செலவில் 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து நேற்று, சென்னை மாவட்டம் – துறைமுகத்தில் ரூ.1 கோடியே 77 லட்சத்து 87 ஆயிரம் செலவில் புதுப்பிக்கப்பட்ட காவல் நிலையம், சென்னை மாவட்டம் – கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் ரூ.14 கோடியே 31 லட்சத்து 28 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர்கள் தங்கும் பாளையம் மற்றும் ஆலந்தூரில் ரூ.3 கோடியே 31 லட்சத்து 81 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர்களின் குழந்தைகளை கல்வி மற்றும் விளையாட்டில் வழிநடத்த உடற்பயிற்சிகூடம், நூலகம் மற்றும் கல்வி மையம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ.82 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதேபோல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பெரும்பாக்கத்தில் 40 குடியிருப்புகள், கிண்டி மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் 2 தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ.35 கோடியே 2 லட்சத்து 55 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடராமன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வினித் தேவ் வான்கேடே, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், தடய அறிவியல் துறை இயக்குநர் விசாலாட்சி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tambaram Police Commissariat ,Chennai ,Thambaram Municipal Police Commissariat ,MLA ,K. Stalin ,Principal ,M.U. K. ,Dimuka ,Stalin ,Thambaram Municipality ,Chennai Municipal Police Commission ,Chennai, ,Thambaram ,
× RELATED கோவிலஞ்சேரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்