சென்னை, பிப்.16: பாரில் ஏற்பட்ட தகராறில் தனிப்படை காவலர் ஒருவரை தாக்கிய வழக்கில் பாஜ நிர்வாகி மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தனிப்படை காவலராக சலீம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். இதனால் நுங்கம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியல் உள்ள டாஸ்மாக் பார்களை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மூட வேண்டும் என்று ஒவ்வொரு பாரிலும் தெரிவித்து வந்தார். அந்த வகையில் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்று மூட வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது பாரில் 5 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதை பார்த்த காவலர் சலீம், அனைவரும் வெளியேறுங்கள், பாரின் நேரம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். அதற்கு மது அருந்திக் கொண்டிருந்த 5 பேரும் காவலர் சலீமிடம் வீண் தகராறு செய்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த காவலர் சலீம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்படி போலீசார், கடும் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, காவலர் சலீமிடன் குடிபோதையில் வீண் தகராறு செய்தது குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த மகாதேவன், சரவணன் மற்றும் புத்தகக்கடை உரிமையாளர் தனசேகரன், ரவி ஆகியோர் என தெரியவந்தது. இவர்களில் ஜெகநாதன் குன்றத்தூர் பகுதி பாஜ நிர்வாகியாக இருப்பதும், அவரது நண்பர்களான மகாதேவன், சரவணன் ஆகியோர் தேமுதிக நிர்வாகிகளாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பாஜ மற்றும் தேதிமுக நிர்வாகிகள் என 5 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் ஒன்றை பறிமுதல் செய்தனர்.

