×

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்; மதமாற்ற புகாரில் ஆதாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ அறிக்கை தாக்கல்

 

புதுடெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் மதமாற்ற புகாரில் ஆதாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தஞ்சாவூரில் கடந்த 2022ம் ஆண்டு பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர், தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், தன்னை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாக மாணவி குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2022ம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி விடுதி வார்டன் சகாய மேரி கொடுத்த மன உளைச்சலும், அவர் கொடுத்த கூடுதல் வேலைப்பளுவுமே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில், ‘மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு விடுதி வார்டன் சகாய மேரி கொடுத்த கடுமையான தொந்தரவுகளே காரணம். விடுதி கணக்குகளை பார்க்க சொல்லி மாணவியை வற்புறுத்தியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார். மாறாக, அவரை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை’ என சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, தற்கொலைக்கு தூண்டுதல் தொடர்பான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 305 மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வார்டன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியது.

Tags : Thanjavur ,CBI ,Supreme Court ,New Delhi ,
× RELATED சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி...