×

உம்மன் சாண்டி குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு வாரிசு: களத்தில் குதிக்கும் மகள்

கேரளாவில் பதவி வகித்த முதல்வர்களில் மிகவும் எளிமையானவர் என்ற பெயர் உம்மன் சாண்டிக்கு உண்டு. இவர் கடந்த 2004 முதல் 2006 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் 7 ஆண்டுகள் கேரளாவின் முதல்வராக இருந்தார். உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது யார் வேண்டுமானாலும் இவரை எளிதில் சந்திக்கலாம். இவர் அலுவலகத்தில் இருந்தால் முதல்வர் அலுவலக வளாகத்தில் கால் வைக்கக் கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம் காணப்படும். ஒருமுறை மனநலம் பாதித்த ஒருவர் முதல்வர் இருக்கையில் அமர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் தன்னுடைய சொந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளிக்கு சென்று தன் தொகுதி மக்களை சந்திப்பதை இவர் வழக்கமாக வைத்திருந்தார். உம்மன் சாண்டி கடந்த 2023ம் ஆண்டு இறக்கும் வரை அவரது மகன் சாண்டி உம்மன் மற்றும் இரண்டு மகள்கள் ஆகியோர் அரசியல் பக்கமே தலை வைக்காமல் இருந்தனர். ஆனால், அவர் இறந்த பின்னர் கட்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்க மகன் சாண்டி உம்மன் தந்தையின் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.

இந்நிலையில் வரும் தேர்தலில் உம்மன் சாண்டியின் மூத்த மகளான மரியா உம்மனை களத்தில் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இதற்கு முதலில் சாண்டி உம்மன் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் அரசியலில் வேண்டாம் என்று இவர் கூறினார். ஆனால் மரியா உம்மனுக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சாண்டி உம்மன் தன்னுடைய முடிவை மாற்றிவிட்டார். மரியா உம்மன் தேர்தலில் போட்டியிட விரும்புவது போல் தகவல் வெளியாகிறதே என்று கடந்த சில தினங்களுக்கு முன் இவரிடம் கேட்டதற்கு, உம்மன் சாண்டியின் குடும்பத்தில் 2 பேருக்கு வாய்ப்பு கிடைப்பது பெரிய கவுரவம் தானே என்றார். மரியா உம்மன் போட்டியிட தயாரானால் செங்கணூர் அல்லது காஞ்சிரப்பள்ளி தொகுதியில் அவருக்கு சீட் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Tags : Oommen Chandy ,Kerala ,Chief Minister of ,Chief Minister… ,
× RELATED சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி...